நாமக்கல்,
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

பெட்ரோல் – டீசல் விலை உயர்வால் ஏழை, எளிய நடுத்தர மக்கள்கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். ஆகவே, இதனை கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்களே விலையை தீர்மானித்து கொள்வது என்ற கொள்கையை திரும்ப பெற வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100 நாள் வேலை திட்டத்தில் மீண்டும் பணி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம் தொண்டிபட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கிளைச் செயலாளர் கே.ராமசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.வேலுசாமி. எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதேபோல், நாமகிரிப்பேட்டையில் ஒன்றிய செயலாளர் சின்னுசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி கண்டன உரையாற்றினார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளனோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிரதேச குழு உறுப்பினர் கா.மு.காளியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பெருமாள், பிரதேச குழு செயலாளர் பி.ஜெயமணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைசெயலாளர் வி.சதாசிவம், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் கு.சிவாராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் பிரதேச குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்;
சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். குழந்தைவேல், மேற்கு மாநகர செயலாளர் எம், கனகராஜ், கிழக்கு மாநகர செயலாளர் பி.ரமணி, வடக்கு செயலாளர் எம்.முருகேசன், சேலம் தாலுகா செயலாளர் சுந்தரம் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் இரண்டு சக்கர வாகனத்திற்கு மாலையிட்டும், ஒப்பாரி வைத்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.