அமராவதி:   
பின்தங்கிய மாநிலங்களைக் காட்டி, வளர்ந்த மாநிலங்களுக்கான நிதியை பறிக்கக் கூடாது என்று, அகில இந்திய அளவிலான மாநில நிதியமைச்சர்கள் மாநாடு, மத்திய அரசைக் கண்டித்துள்ளது.

மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை, 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்வதென 15-ஆவது நிதிக்குழு பரிந்துரை அளித்துள்ளது. ஆனால், இந்த புதிய பரிந்துரையின்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியுள்ள தென்மாநிலங்கள் மிகப் பெரிய இழப்பைச் சந்திக்கும் என்று எதிர்ப்பு எழுந்தது.இதுதொடர்பாக, கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி கேரள மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக், தென் மாநில நிதியமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டினார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஆந்திர நிதியமைச்சர் யனமலா ராமகிருஷ்ணடு, கர்நாடக விவசாயத்துறை அமைச்சர் கிருஷ்ணா பைரே கௌடா மற்றும் கேரளத்தின் சார்பில் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஆகியோர் பங்கேற்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயனும் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில், பாஜக ஆளும் வடமாநிலங்களுக்குச் சாதகமான 15-ஆவது நிதிக்குழுவின் முடிவுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடர்ந்து மத்திய அரசுடன் போராடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், அப்போதே நிதியமைச்சர்களின் அடுத்த கூட்டத்தை இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் அமராவதியில் நடத்துவது என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி
‘வளர்ச்சியடையாத மாநிலங்களுக்கு நிதி உதவி அளிப்பது அவசியமானதுதான். அதற்காக வளர்ச்சியடைந்த மாநிலங்களின் நிதியில் கை வைக்கக் கூடாது’ என்று அனைத்திந்திய அளவிலான நிதியமைச்சர்களின் கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்துத் தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலம் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு தலைமையில் அகில இந்திய அளவிலான நிதியமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. தில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மேற்கு வங்க அமைச்சர் அமித் மித்ரா, கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், பஞ்சாப் நிதியமைச்சர் மன்ப்ரீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, “2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நிதி பகிர்ந்தளிக்கப்பட்டால் தென்மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்படும்; 15-ஆவது நிதிக் குழுவின் விதிமுறைகளானது, முற்போக்கான மாநிலங்களைத் தண்டிப்பதாக அமைந்துவிடும்; வளர்ச்சியடையாத மாநிலங்களுக்கு நிதி உதவி அளிப்பது தேவையானதுதான்; அதற்காக வளர்ச்சியடைந்த மாநிலங்களின் நிதியில் கை வைக்க கூடாது; இது பெரும் உள்ளக் குமுறலைத்தான் ஏற்படுத்தும்” என்று மாநில நிதியமைச்சர்கள் தங்களின் கருத்தை தெரிவித்தனர்.“15-ஆவது நிதிக் குழுவின் விதிமுறைகளானது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 284(4) மற்றும் 275 ஆகியவற்றை நீர்த்துப் போகச் செய்யும் விதமாக உள்ளது” என்றும் அவர்கள் குற்றம் சாட்டினார்.
கேரளத்தில் நடைப்பெற்ற கூட்டத்தில் பங்கேற்காததைப் போலவே, ஆந்திராவில் நடைப்பெற்ற கூட்டத்திலும், தமிழக அரசின் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.