===பேராசிரியர் கே. ராஜு===
அண்மைக் காலமாக, நாம் ஒரு புதிய யுகத்தில் நுழைந்திருக்கிறோம். அதை “பகுத்தறின்மைக்கு விரோதமான யுகம்” என்பது பொருத்தமாக இருக்கும். அச்சே தின், புதிய இந்தியா என்று பல வார்த்தைகளில் ஆட்சியாளர்கள் இந்தியாவை வர்ணித்தாலும் இதுதான் உண்மை. திரிபுராவின் புதிய முதலமைச்சர் பிப்லவ் குமார் தேவ் இந்தப் புதிய யுகத்தின் புதிய அவதாரமாகக் காட்சியளிக்கிறார். கேலிக்குரிய கருத்தை முன்வைத்து கேட்பவர்களை அசர வைக்கப் போவது யார் என்பதில் அதிகாரத்தில் உள்ள பிரபலங்களிடையே தற்போது ஒரு போட்டியே நடந்து வருகிறது.மகாபாரத காலத்திலேயே இணையம் இருந்தது என்று அதிரடியாக அறிவித்து, விநாயகர் உருவம் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததற்கான அடையாளம்… குரங்கு மனிதனாக மாறுவதை யாரும் இதுவரை பார்த்திராததால் பரிணாமக் கொள்கையை நிராகரிக்க வேண்டும்.. என்ற தனது சகாக்களின் கூற்றுகளை பிப்லவ் குமார் வெற்றிகரமாகக் பின்னுக்குத் தள்ளிவிட்டார். ஐன்ஸ்டீனுடைய E=mc2 என்ற சமன்பாட்டைவிட மேலானதொரு சமன்பாடு வேதங்களில் இருப்பதாக ஸ்டீபன் ஹாக்கிங் கூறினார் என்று கூட அவர் ஒரு சிக்சர் அடித்தார்!

இப்படிப்பட்ட சொல்லாடல்கள் உலக அறிவியல் சமூகம் நம்மைக் கேலிக்குரியவர்களாகப் பார்க்கும் அவல நிலைக்குத் தள்ளிவிட்டன. சுதந்திரத்திற்குப் பிறகு நாம் பெருமைப்படத்தக்க சில அறிவியல் சாதனைகளை நிச்சயம் நிகழ்த்தியிருக்கிறோம். ஆனால் அவற்றையெல்லாம் குழி தோண்டிப் பறிக்கும் வேலையைத்தான் தற்போதைய யுகம் செய்யத் தொடங்கியிருக்கிறது. போலி அறிவியலைத் திணிக்க பிரபலமான அரசியல் தலைகள் செய்து வரும் முயற்சிகளை நாம் அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிட முடியாது. கேள்விகள் கேட்பதும் சான்றுகளைக் கோருவதும் அறிவியல் கண்ணோட்டத்தின் அடிப்படை.

ஓர் அறிவியல் சமூகத்தில் கண்மூடித்தனமான நம்பிக்கைகளுக்கு இடம் இருக்காது. சோதிடமும் கைரேகை ஆரூடங்களும் கோலோச்சும் அவலம் இருக்காது. ஆனால் இன்று ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கேள்வி கேட்கும் இந்தியர்களைப் பிடிப்பதில்லை. அதே சமயம், 21-வது நூற்றாண்டிற்கான நவீன இந்தியாவை நிர்மாணிக்கப் போவதாக மற்றொரு புறம் அவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்வதை எந்தக் கணக்கில் வைப்பது? அறிவியல் பார்வையற்ற சமூகம் நிர்வாகத் திறமையற்ற ஆட்சியாளர்களின் வேலையை எளிதாக்கிவிடுகிறது. அப்படிப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அடிப்படையான கேள்விகளைக் கூடக் கேட்க மாட்டார்கள். தான் சாதித்துவிட்டதாக ஆட்சியாளர் ஏதாவது ஒன்றைக் கூறிவிட்டால் போதும்.. நம்பிக்கையாளர்கள் அவரைக் கும்பிட்டு அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். மாறாக, பகுத்தறிவுடன் சிந்திக்கும் ஒரு சமூகம் ஆட்சியாளர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாது.

ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல், சாதி-மதம்-பாலினம் அடிப்படையிலான துன்புறுத்தல்கள்/தாக்குதல்கள் ஆகியவற்றின் மீது கேள்விகளை எழுப்பும்.. விதிமீறல்கள் எப்படி நடந்தன.. எங்கள் கேள்விகளுக்கு விடைகள் கொடு எனக் கேட்கும்.. ஆனால் பகுத்தறிவு காணாமல் போகும் சமூகத்தில் சிறுபான்மையினர், தலித்துகள், பெண்கள், சுதந்திரச் சிந்தனை கொண்டவர்கள் ஆகியோர் அதன் விளைவாக பாதிக்கப்படுவார்கள். சமூக நடப்புகளை உன்னிப்பாகக் கவனிக்கும் மனித நேயர்கள் இன்றைய இந்தியா இந்த நிலையில்தான் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வார்கள்.

அறிவியல் கண்ணோட்டத்திற்கு எதிரான மூளைச் சலவை நம்முடைய இளம் வயதிலேயே தொடங்கிவிடுகிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள், பெரியவர்களுக்கெதிராகக் கேள்வி கேட்பது நல்ல குணத்திற்கு அழகல்ல என்ற போதனை நம்முடைய குடும்பங்கள், உறவினர்கள், நண்பர்கள், பள்ளிகளில் குழந்தைகளுக்கு செய்யப்படுகிறது. `உயர்சாதி’யில் பிறந்துவிட்ட குழந்தைகளுக்கு தாங்கள் சாதி அடுக்கில் உயர்ந்தவர்கள் என்ற ஆழமான எண்ணம் சிறுவயதிலிருந்தே உருவாக்கப்படுகிறது. அப்படி வளர்க்கப்பட்ட சமூகத்தில் அறிவியல் கண்ணோட்டத்தின் மீது தாக்குதல் தொடுப்பது எளிதாகி விடுகிறது. கடந்த காலத்தின் உண்மையான மேன்மைகள் மீது நாம் பெருமிதப்படுவது அவசியம்தான். ஆனால் அரசு மேற்கொண்டிருக்கும் பகுத்தறிவின்மைத் திட்டத்தின் இறுதி இலக்கு தேசத்தின் கடந்த காலத்தைப் பற்றி இல்லாத பெருமைகளை இட்டுக்கட்டி எடுத்துச் சொல்லி தற்கால பிரச்சனைகளின் மீது மக்களின் கவனம் சென்றுவிடாதபடி பார்த்துக் கொள்வதுதான். அறிவியல் உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாமோ போலிப் பெருமையில் மூழ்கடிக்கப்படுகிறோம். விடுதலை எப்போது என்ற கேள்வி உண்மையான அறிவியலாளர்களிடம் எழுகிறது.

( உதவிய கட்டுரை ; 2018 மே 4 தேதியிட்ட ஆங்கில இந்துவில் சஞ்சய் ராஜௌரா எழுதியது)

(சென்ற வாரம் வெளியான ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றிய கட்டுரையில் ஒரு திருத்தம்)

பெரு வெடிப்புக் கோட்பாடு பற்றிய பாராவில் ‘பேரண்டம் சுமார் 1380 ஆண்டுகளுக்கு முன் ஒரு புள்ளியிலிருந்து தோன்றியது என்கிறது இக்கோட்பாடு’ என்று வருகிறது. அதை ‘பேரண்டம் சுமார் 1380 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு புள்ளியிலிருந்து தோன்றியது என்கிறது இக்கோட்பாடு’ என திருத்திக் கொள்ளவும்.

Leave a Reply

You must be logged in to post a comment.