பட்டுக்கோட்டை:
தமுஎகச சார்பில் தீக்கதிர் ஆசிரியரும், தலைசிறந்த கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்களில் ஒருவரும், தமுஎகச நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான தோழர் கே.முத்தையாவின் நூற்றாண்டு தொடக்க விழா பட்டுக்கோட்டை தலைமை தபால்நிலையம் அருகில் பறையிசைக் கலைஞர் ரெங்கராஜன் நினைவு மேடையில் நடைபெற்றது.

தமுஎகச மாநில துணைச் செயலாளர் களப்பிரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தஞ்சை மாவட்டச் செயலாளர் இரா.விஜயகுமார் வரவேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் ஆயிராசு, அ.ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் ச.ஜீவபாரதி தொடக்கவுரையாற்றினார். பேராவூரணியில் இருந்து கொண்டு வரப்பட்ட கே.முத்தையா நினைவுச்சுடரை கிளைச் செயலாளர் நா.வெங்கடேசன் வழங்க, தமுஎகச மாநில துணை பொதுச் செயலாளர் கருப்பு கருணா பெற்றுக் கொண்டார்.தொடர்ந்து தமுஎகச மாநில துணைத் தலைவர் சிகரம் ச.செந்தில்நாதன் பேசுகையில், “எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆக இருந்த போது ஆனந்த விகடன் பத்திரிகையில் வெளியான கேலிச்சித்திரம் தொடர்பாக விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியம் சட்டமன்றம் வரவழைக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டபோது, தமுஎகச மட்டுமே முதன்முதலில் கண்டனக் கூட்டங்களை நடத்தியது. திரைப்படங்களில் ஆட்சியாளர்களை, மக்கள் பிரதிநிதிகளை விமர்சிக்கக் கூடாது. மீறினால் திரையிடத் தடை என எம்.ஜி.ஆர். அரசு சட்டம் கொண்டு வந்தபோது, திரைத்துறையினரே எதிர்க்க தயங்கியபோது, அதனைக் கண்டித்து கட்டுப்பாடான ஊர்வலம் நடத்தப்பட்டது. இதையெல்லாம் முன்னின்று நடத்தியவர் தோழர் கே.முத்தையா.இந்த மசோதாவை நிறைவேற்ற ஆளுநர் ஒப்புதல் தரக்கூடாது என கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. கடைசி வரை ஆளுநர் ஒப்புதல் பெறப்படாமலே சட்டம் காலாவதியானது. எடுத்த காரியத்தை நேர்த்தியாகவும், வெற்றிகரமாகவும் செய்து முடிப்பவர் தோழர் கே.முத்தையா” என்றார். 

தமுஎகச மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு கருணா பேசுகையில், ” எதிர்க் கருத்துகளை பேசுபவர்களையும் தாக்குவதும், கொல்வதுமாக, கருத்துரிமைக்கு எதிராக மதவாத பாஜக கும்பல் செயல்பட்டு வருகிறது. தமுஎகச எந்த சூழ்நிலையில், எதற்காக துவங்கப்பட்டதோ, அதே சூழல் இன்றும் உள்ளது. மதவாத சக்திகளை அகற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. தோழர் கே.முத்தையா நினைவுச் சுடரை தமிழகமெங்கும் கொண்டு செல்வோம். அவர் விரும்பிய சமூகத்தை, மதவெறியற்ற தேசத்தை கட்டமைப்போம்” என்றார்.

தமுஎகச மாநிலத் தலைவர் ச.தமிழ்செல்வன் பேசுகையில், ” களப்போராளியாக, அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக, தமுஎகசவை முன்னெடுத்து சென்ற கே.முத்தையா பல நூல்களை எழுதியிருந்தாலும், அவர் எழுதி அச்சிலேறாத பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் உள்ளன. அவற்றை நூலாக ஆக்கிக் கொண்டு வரவேண்டிய கடமை நமக்கு உள்ளது. விவசாயம் குறித்தும், இராமர் குறித்தும், இளங்கோவடிகள் குறித்தும் ஏராளமான ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். வரலாற்றில் உள்ள புரட்டுக்களை தோலுரித்துக் காட்டி, உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த அவரது நூல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.

தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் பேசுகையில், ” கொள்கைகளை உரத்த குரலில் பேசிப்பேசியே செவித்திறனை இழந்த தோழர் ஜீவாவின் அடிச்சுவட்டில் வந்தவர் தான் தோழர் கே.முத்தையா. தனது இளம்பிராயத்தில், பட்டுக்கோட்டையில் சீமான் நாடிமுத்து பிள்ளை இல்லத்தில் தங்கிப்படித்த கே.முத்தையா, பின்னர் நடந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளை உள்ளடக்கிய அதிராம்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் நாடிமுத்து பிள்ளையை எதிர்த்து போட்டியிட்டு, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அப்பொழுது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முத்தையாவிற்காக தேர்தல் பிரச்சாரம் செய்தது வரலாறு. தோழர் கே.முத்தையா குழந்தையைப் போலவும் இருப்பார். மேதையைப் போலவும் இருப்பார். தன்னகங்காரம் இல்லாத தனிப்பெரும் தலைவர். இளைஞர்களை, மாணவர்களை தந்தையைப் போல அரவணைத்து ஆதரித்து வளர்த்தவர்.அநீதியை கண்டால் சீறும் குணம் கொண்டவர் அவர். மதுரையில் ஒரு தியேட்டரில் சீனா குறித்து பொய்யான தகவல் இருந்த போது, “இது பொய்” என எழுந்து கர்ஜித்தவர். பத்திரிகை உலகில், எப்படி எழுதவேண்டும் என சொல்லித்தரும் பல்கலைக்கழகமாக செயல்பட்டவர். பத்திரிகை துறைகளில் சில தவறுகள் நடக்க வாய்ப்பு உண்டு. ஆனால் தவறே வரக்கூடாது என உறுதியோடு செயல்பட்டார்.

தீக்கதிரின் ஆசிரியராக இருந்த போது, தபால்காரரை எதிர்பார்த்து காத்திருந்து, சந்தா பணம் மணியார்டரில் வந்ததும், அதைக்கொண்டு சாப்பாடு வாங்கி வந்து சக தோழர்களுடன் பகிர்ந்து உண்டு வாழ்ந்தவர். வளமையாக பிறந்தும், வறுமையை நேசித்தவர் கே.முத்தையா. பத்திரிகை அலுவலகத்தின் அச்சு இயந்திரத்தின் ‘தடக், தடக்’ சத்தம் தான் அவருக்கு தாலாட்டுச் சத்தம்.
நிறைய நூல்களை எழுதியுள்ளார். மொழிமாற்றம் செய்துள்ளார். சிறந்த நாவலாசிரியர், நாடக ஆசிரியர் என பல பரிமாணங்களில் ஜொலித்தவர். மேலாண்மை பொன்னுசாமி என்ற சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளரை இம்மண்ணிற்கு அடையாளம் காட்டியவர். அவரது நூற்றாண்டு தொடக்க விழாவில் அவரது கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்” என்றார்.

நிறைவாக மாவட்டப் பொருளாளர் முருக சரவணன் நன்றி கூறினார். தொடர்ந்து புதுகை பூபாளம் கலைக்குழுவின் நையாண்டி நிகழ்ச்சியும் நடைபெற்றது.நிகழ்வில் தஞ்சை இனியன், வீரமணி, சற்குணம், இலக்கியன், அனந்தசயனம் ஆகியோர் கவிதை வாசிக்க, இசைப்பாடல்களை அரங்கராஜன், இரமேஷ், கௌரிசங்கர், தமிழ்வாணன், கண்ணகி, புதுக்கோட்டை விக்கி, கோபி, ஜனா ஆகியோர் பாடினர். மேலை நீலமேகத்தின் ஓரங்க நாடகம் நடைபெற்றது.

Leave A Reply

%d bloggers like this: