கோவை,
கோவையில் தனியார் பள்ளி வாகனங்களை செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களின் தரத்தை ஆண்டுதோறும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக செவ்வாயன்று 488 தனியார் பள்ளி வாகனங்களில் தர ஆய்வு நடத்தப்பட்டது. கோவை காவலர் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பார்வையிட்டார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், காவல், கல்வி, போக்குவரத்துத் துறை அலுவலர்கள் கொண்ட குழுவினர் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய உள்ளனர். வாகனத்தில் தினசரி குறிப்பு புத்தகம், முதலுதவிப் பெட்டி, தீயணைப்புக் கருவி, அவசரக்கால வழி மற்றும் இருக்கை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து சோதனை செய்யப்படுகிறது.

வாகனம் முறையான பராமரிப்பின்றி இருந்தால் அந்த வாகனம் திருப்பி அனுப்பப்பபட்டு பழுதுகளை சரிசெய்த பின்னரே வாகனத்தை தொடர்ந்து இயக்க அனுமதிக்கப்படும். மேலும், ஓட்டுநர்களுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு ஊக்குவிக்கப்பட உள்ளது. இதன் மூலம் விபத்துகளை முற்றிலுமாக தவிர்த்து, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித்குமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உதயகுமார், பால்ராஜ், குமரவேல், மெட்ரிக். பள்ளிகளின் ஆய்வாளர் கீதா, போக்குவரத்து ஆய்வாளர்கள் எஸ்.பாலமுருகன், ஏ.அப்சல்கான், எஸ்.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: