அரியானா மாநிலத்தில் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமையன்று கடைப்பிடிக்கும் திறந்தவெளி தொழுகையை சீர்குலைக்கும் வகையில் சமீப காலமாக சங்பரிவார் கும்பல்கள் தாக்குதல் நடத்தி  வருகின்றனர். இதனால் சிறுபான்மையினரின் மதவழிபாட்டு உரிமை அப்பட்டமாக மறுக்கப்பட்டு வருகிறது. இது இந்திய ஒருமைப்பாட்டிற்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கையாகும். எனவே சிறுபான்மையினரின் திறந்தவெளியில் தொழுகை நடத்துவதை உறுதி படுத்த வேண்டும் என்று ஓய்வு பெற்ற முக்கியமான ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டாக அரியான மாநில முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றனர்.
மகாராஷ்டிரா மாநில முன்னாள் தலைமை செயலாளர்  சுந்தர்ப்யூரா, மத்தியப்பிரதேச முன்னாள் அதிகாரி ஹர்ஸ்மந்தர், மத்தியரசின்  முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் கே.சுஜதாராவ், மேற்குவங்க முன்னாள் தலைமைச்செயலர் அர்தந்த் சென் ஆகியோர் உள்ளிட்ட மூத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் 11 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை  அரியான மாநில தலைமைச் செயலாளர் தீபந்தர் சிங் தேஷியிடம் அளித்துள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது :  வெள்ளிக்கிழமைகளில் திறந்த வெளிகளில் தொழுகை நடத்தும் இஸ்லாமிய மக்களின் மீது சங்பரிவார்  கும்பல்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் குருகிராம் பகுதிகளில் பொது இடங்களில் தொழுகை நடத்தியவர்கள் தாக்கப்பட்டனர், இதற்கு விஸ்வஹிந்து பரிஷத்,பஜ்ரங்தள்,கோரத்பாத்தாக் மற்றும் சிவசேனா போன்ற இந்து அமைப்புகள் தான் எனக்கூறப்பட்டது.கடந்த வாரம் குருகிரம் எம்.ஜி சாலையில் இஸ்லாமியர்களை வெறுப்பூட்டும் விதமாக ஒரு அமைப்பு முழக்கங்கள் எழுப்பியது.இது போன்ற வன்முறையைத் தூண்டும் செயல்களில் சில அமைப்புகள் செயல்படுகின்றன.இதனை முற்றிலுமாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்பரிவார் கும்பல்களின் தாக்குதல் ஒருங்கிணைக்கப்பட்ட வடிவில் ஒரு தெளிவான திட்டத்தோடு அரங்கேற்றப்படுகிறது. இந்த தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் நிகழ்வுகள் மாவட்டம்  முழுவதும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக திட்டமிட்ட வெறுப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது படிப்படியாக தீவிரமாகி வருகிறது. மேலும் இஸ்லாமியர்கள் காலியிடங்களை ஆக்கிரமிப்பு செய்து மசூதி கட்ட முயற்சி செய்கின்றனர். அதனால் இந்துக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக திரள வேண்டும் என இஸ்லாமியர்களுக்கு எதிரான திட்டமிட்டு உண்மைக்கு மாறான வெறுப்பு பிரச்சாரம் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்படுகிறது.
அதே நேரத்தில் தொழுகை நடத்துபவர்களால் இதுவரை ஒரு சிறு அசம்பாவிதம் கூட நடைபெறவில்லை.  குறிப்பாக சங்பரிவார் அமைப்புகள் தாக்குதல் நடத்திய போது கூட மசூதி தரப்பில் இருந்து மோதல் போக்கை கடைப்பிடிக்கவில்லை. ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களின் கடவுளை வழிபட அனைத்து உரிமையும் உள்ளது. இதே நேரத்தில் நவராத்திரி, துர்கா பூஜை போன்ற நேரங்களில் பொதுஇடங்களில் நிகழ்ச்சிகள் தரிசனம் நடைபெறுவதில்லையா… ? அப்படியிருக்கையில் இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையை மட்டும் மறுப்பது என்ன நியாயம்..? இஸ்லாமியர்களின் திறந்தவெளி வழிபாட்டு உரிமையை மாநில அரசு பாதுகாத்திட வேண்டும்.
முன்னதாக அரியான மாநில  முதல்வர் மனோகர் லால் கத்தார் தொழுகை வழிபாடுகள் பொது இடங்களில் நடத்தப்படுவது அல்ல, “அது காட்சிப்படுத்தப்பட வேண்டியதும் அல்ல” என்று கூறினார். சங்பரிவார் அமைப்புகளின் அச்சுறுத்தும் வன்முறை நிகழ்வுகளுக்கு மறைமுகமாக ஆதரித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது-

Leave a Reply

You must be logged in to post a comment.