திருப்பூர்,
அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி திருப்பூர் முதலாம் மண்டல அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி 12-வதுவார்டுக்குட்பட்ட மகாலட்சுமி நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறும் வகையில் மாநகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இப்பகுதியில் தார் சாலை அமைக்கப்படாததால், மழை பெய்யும் போதெல்லாம் அந்த சாலையில் உள்ள மண் அனைத்தும் அங்குள்ள சாக்கடை கால்வாயில் தேங்குகிறது. இதன் காரணமாக கால்வாய் நிரம்பி கழிவுநீர் அனைத்தும் வீடுகளுக்குள் புகுகிறது. இதனால் பெரும் சுகாதார சீர்கேட்டிற்கு அப்பகுதி மக்கள் ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் செவ்வாயன்று முன்னாள் கவுன்சிலர் ரவிச்சந்திரன் தலைமையில் முதலாவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உதவி ஆணையாளர் வாசுக்குமார், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அப்பகுதி மக்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் இதுவரை தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் சாலையில் உள்ள மண் அங்குள்ள சாக்கடை கால்வாய்க்கு சென்று கால்வாய் நிரம்புவதால் கழிவுநீர் அனைத்தும் வீடுகளுக்குள்ளும் புகுந்து விடுகிறது.

எனவே அந்தப்பகுதியில்உடனடியாக தார்சாலை அமைப்பதுடன், அங்குள்ள சாக்கடை கால்வாயை அவ்வப்போது தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ராஜீவ்நகரில் சேதமடைந்துள்ள குடிநீர் தொட்டியை மாற்ற வேண்டும். குடிநீரை சீராக விநியோகம் செய்ய வேண்டும் என கூறினார். இதுதொடர்பான பிரச்சனைகளுக்கு விரைவில் உரிய தீர்வுகாணப்படும் என்று ஆணையாளர் உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: