கோவை,
ஜாக்டோ – ஜியோ அமைப்பின் கோரிக்கையை செவிமடுக்காமல் அடக்குமுறையை கையாலும் தமிழக அரசை கண்டித்து கோவையில் சத்துணவு ஊழியர்கள் ஆவேசமிகு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நிலுவையில் உள்ள ஊதியதை வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களை காலமுறை ஊதியத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் மே 8 ஆம் தேதி சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இச்சூழலில் போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காக கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் உள்ள இக்கூட்டமைப்பின் தலைவர்களை தமிழக அரசின் உத்தரவின்படி இரவோடு இரவாககாவல்துறையினர் கைது செய்தனர். தமிழக அரசின் இந்த அடக்குமுறையை கண்டித்து தமிழகம் முழுவதும் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன்ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சங்கத்தின் துணைச் செயலாளர் ராஜகோபால் தலைமை தாங்கினார். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சிவக்குமார் வாழ்த்தி உரையாற்றினார். சத்துணவு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் இன்னாசிமுத்து கண்டன உரையாற்றினார். இதில்சத்துணவு ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்று தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.