கோவை,
அரசுப்பள்ளி மாணவர்கள் சீருடைகள் மற்றும் பணியாளர்களுக்கான ஆடை தைப்பதற்கான கூலியை 20 சதவிகிதம் உயர்த்தி வழங்க வேண்டுமென தையல் கலைஞர்கள் சங்க பேரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கத்தின் (சிஐடியு) 10 ஆம் ஆண்டு பேரவை ஞாயிறன்று கௌரவத் தலைவர் வி.ஆண்டாள் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர்கள் எம்.கிரிஜா, வி.பெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஆர்.மனோகரன் வாழ்த்துரை வழங்கினார். தையற் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.வேலுசாமி அறிக்கையை முன்வைத்து பேசினார். முன்னதாக, இம்மாநாட்டில் தையல் தொழிலாளர் நலவாரியத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கோவை மாவட்ட நலவாரிய அலுவலகத்தில் கடந்த மூன்று மாத காலமாக நிரப்பபடாமல் உள்ள உதவி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள நலவாரிய பணப்பயன்களை உடனடியாக வழங்க வேண்டும். தையல் கலைஞர்களுக்கு இலவச பேருந்து அட்டை, இலவச மின்சாரம் உள்ளிட்ட சட்ட, சமூக பாதுகாப்புகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, இப்பேரவையில் சங்கத்தின் கௌரவ தலைவராக ஆண்டாள், தலைவராக ஆர்.மனோகரன், பொதுச்செயலாளராக ஆர்.வேலுசாமி, பொருளாளராக கு.லலிதா உள்ளிட்ட 15 பேர் கொண்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: