அகர்தலா:
திரிபுராவில் இந்தியில் மட்டுமே செய்திகளை ஒளிப்பரப்ப வேண்டும் என உள்ளூர் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க, அம்மாநிலத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் வட கிழக்கில் உள்ள திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடைப்பெற்று வந்த ஆட்சி, பல்வேறு சதித்திட்டங்களின் மூலம் வீழ்த்தப்பட்டது. மதவாதிகள், பிரிவினைவாதிகளை கூட்டுச் சேர்த்துக் கொண்டு, மக்களுக்கு ஏராளமான மோசடி வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்தனர். பாஜக-வைச் சேர்ந்த பெரும்பணக்காரர் பிப்ளப் குமார் தேப் முதல்வரானார்.இவர் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றை பேசி சர்ச்சையைக் கிளப்பி வருகிறார். மகாபாரத காலத்திலேயே இண்டர்நெட், சாட்டிலைட் இருந்தது என்று கூறிய அவர், இன்னொரு நிகழ்ச்சியில், உலக அழகி என்றால் தன்னைப் பொறுத்தவரை ஐஸ்வர்யா ராய்-தான் என்றும், டயானா ஹைடனெல்லாம் ஒரு அழகியா? என்று அவரது நிறத்தை மட்டம் தட்டிப் பேசினார். அந்த சர்ச்சை முடிந்த நேரத்தில், இளைஞர்கள் அரசு வேலைக்குப் பதில் பீடா கடை போடலாம்; இல்லாவிட்டால் மாடு மேய்க்கலாம் என்றார். கடைசியாக, தனது அரசை விமர்சித்தால் நகத்தை இழுத்து வைத்து வெட்டுவேன் என்றும் மிரட்டலும் விடுத்தார்.

இந்நிலையில், திரிபுராவில் உள்ள உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் இந்தி மொழியில் மட்டுமே செய்திகளை ஒளிப்பரப்ப வேண்டும் என உத்தரவிட முடிவு செய்துள்ளார். தற்போது 2-ஆவது அலுவல் மொழியாக உள்ள கோக்போராக்கிற்கு மாற்றாக இந்த முடிவை செயல்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். திரிபுரா மாநிலத்தில் தேசப்பற்றை வளர்க்கவே இந்தியைக் கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிப்ளப்  குமார் தேப் அரசின் முடிவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.