ஈரோடு,
தனியார் அலைப்பேசி நிறுவனம் சார்பில் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கோவில்பாளையம் பகுதி மக்கள் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம், பவானி ஓடத்துறை கிராமத்திற்கு உட்பட்ட கோவில்பாளையம் புதுக்காலனி பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; மேற்குறிப்பிட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில், தனியார் அலைபேசி நிறுவனத்தின் டவர் அமைக்கப்பட்டு வருகிறது. குடியிருப்புகள் மத்தியில் அலைபேசி டவர் அமைக்கப்படுவதால், அதன் சுற்று வட்டாரப் பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கோபுரத்தின் அலைக்கற்றை மின் காந்த ஈர்ப்பு இருக்கும். மேலும், கர்ப்பிணிகள் மற்றும் 16 வயதிற்குட்பட்டவர்களை எளிதாக மின்காந்த அலைகள் தாக்கி புற்றுநோய், மூளை பாதிப்பு, வலிப்பு நோய் போன்றவற்றை உருவாக்கும். எனவே, பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு அருகில் அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.