கோவை,
ஜேக்டோ ஜியோ தலைவர்களை திங்களன்று பல்வேறு இடங்களில் அதிரடியாக கைது செய்த சம்பவம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பான ஜேக்டோ, ஜியோ அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்ஒருபகுதியாக இன்று (செவ்வாய்கிழமை) சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தமிழகம் முமுவதும் ஜேக்டோ ஜியோ அமைப்பின் முக்கியத் தலைவர்கள் இரவோடு இரவாக வலுக்கட்டாயாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவருமான செந்தில்குமார், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இன்னாசிமுத்து மற்றும் மாவட்ட இணை நிர்வாகிகள் சாமிகுணம், பாஸ்கரன், சின்னமாரிமுத்து, ஜெகநாதன் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்டக்குழுவின் சார்பில் செயலாளர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோட்டை முற்றுகை போராட்டத்தை முறியடிக்கும் விதமாக காவல்துறையை பயன்படுத்தி தமிழக அரசு அடக்குமுறையை ஏவிவிடுகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்ட ஜேக்டோ-ஜியோ நிர்வாகிகள் மற்றும் பெண் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை இரவோடு இரவாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும், அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்டுள்ள அரசு ஊழியர் ஆசிரியர் ஊதியம் தொடர்பான செய்தி உண்மைக்கு புறம்பானது. அமைச்சர்கள் செலவு, எம்எல்ஏக்கள் மற்றும் நீதிபதிகள் பெற்ற ஊதிய உயர்வு நிலுவை குறித்த தகவல்களை முழுமையாக அமைச்சர் மறைத்துள்ளார். அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கே நிதி வருவாய் செலவிடுவதாக பொய் செய்தியை வெளியிட்டு போராட்டத்தை சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். அமைச்சரின் இந்நடவடிக்கையை அரசு ஊழியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறோம். இதுபோன்ற செயல்பிரச்சனைகளை தீர்க்க உதவாது, மேலும் போராட்ட தீயில் எண்ணை ஊற்றவே உதவும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழக அரசு போராடும் சங்க தலைவர்களை அழைத்துபேசி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், ஜேக்டோ ஜியோவின் போராட்டம் ஊழியர்களுக்கான ஊதியம் தொடர்பான போராட்டம் மட்டுமல்ல. மாறாக எதிர்கால இளைஞர்களின் வேலைக் கணவை சீர்குலைக்கும் அரசின் மக்கள் விரோத கொள்கையை எதிர்த்த போராட்டம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அரசு எவ்வித அடக்குமுறையை மேற்கொண்டாலும், கோரிக்கையை வென்றெடுக்கும் வரை எங்களது போராட்டம் ஓயாது என அரசிற்கு தெரியப்படுத்துகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருப்பூர்:
இதேபோல், திருப்பூர் மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அம்சராஜ், சாலை பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணி, கிராம உதவியாளர் சங்கத்தின் வட்டக்கிளை தலைவர் திலிப்குமார் மற்றும் தம்பான் ஆகியோரை உடுமலை காவல்துறையினர் அதிகாலையில் சென்று எவ்வித காரணமும் சொல்லாமல் கைது செய்தனர். பின்னர் அவர்களை உடுமலை காவல் நிலையத்தில் வைத்து உள்ளனர்.

இதற்கிடையே, அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்று சிஐடியு அமைப்பின் தலைவர்கள், கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களை சந்தித்து போராட்டம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர். அதேநேரம், தமிழக அரசின் இந்த நடவடிக்கை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.