ஈரோடு,
விளை நிலங்களில் மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கைகளை அரசு கைவிட வில்லை எனில் சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டங்களை நடத்துவோம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

விளை நிலங்களில் மின் கோபுரம் அமைத்து மின்சாரம் கொண்டு செல்வதற்கு எதிரான அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோட்டில் கோரிக்கை மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்று பேசுகையில், நாம் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை எதிர்க்கவில்லை. இதனை மாற்று வழியில் செயல்படுத்துங்கள். கேபிள் வழியாக இந்த மின்சாரத்தை கொண்டு செல்வதற்காக மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்றுதான் கோருகிறோம்.

மாறாக, கடந்த 6 மாத காலமாக விவசாயிகளின் சொந்த நிலங்களில் அனுமதியின்றி நுழைந்து தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் கார்ப்பரேட்டுகளும் மின் கோபுரம் அமைக்க முற்படுகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் இந்த உயர் மின் கோபுர மின்சாரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இந்த மாநாடு வலியுறுத்துவது என்னவெனில், உங்கள் நிலத்தில் உங்களின் அனுமதி இல்லாமல் அரசு அதிகாரிகள் வந்தால் அனுமதிக்காதீர்கள். எங்களுடைய நிலம், அனுமதி தரமாட்டோம் என முழக்கங்களை எழுப்புங்கள்.

பட்ட காலில் படும், கெட்ட குடியே கெடும் என கூறுவார்கள். அதைபோல் ஏற்கனவே இந்த பகுதிகளில் எரிவாயு குழாய் பதிக்க திட்டமிடப்பட்டது. இதனை எதிர்த்து இந்த ஈரோட்டு மண்ணில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தினோம். கெயில் நிறுவனத்திற்கு எதிராக சேலத்தில் போராட்டத்தை நடத்தினோம். அதன் பிறகு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கருத்து கேட்கும் கூட்டம் நடத்தி, விவசாயிகளுக்கு எதிராக வரும் எந்த திட்டங்களையும் இந்த அரசு அனுமதிக்காது. ஆகவே, கெயில் நிறுவனம் மாற்று வழியில் நிறுவ வேண்டும் என சட்டமன்றத்தில் அறிவித்தார்கள்.ஆனால், இன்றைய அரசு கடந்த 6 மாத காலமாக போராட்டங்கள் நடத்தி வரும்போதும், எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் முன்வரவில்லை. விவசாயிகளும், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளும் மோதட்டும் என நினைக்கிறார்கள். அதனால் தான் அரசை எச்சரிக்க விரும்புகிறோம். தமிழக விவசாயிகளின் இந்த பிரச்சனையை சுமுகமாக தீர்வு காண வேண்டும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு விவசாயிகளின் சங்க பிரதிநிதிகளை அணுகி பேசி தீர்ப்பதற்காக முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஆனால், கௌரவம் பார்த்துக்கொண்டு அடாவடி முறையில் திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்தால், ஒரு குழி கூட எங்களின் நிலத்தில் தோண்ட முடியாது என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். ஏற்கனவே, மாவட்ட, ஒன்றிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன்பின்னரும் உரிய தீர்வு காணாவிட்டார் சென்னை கோட்டையை குறைந்தபட்சம் 16 மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரம் விவசாயிகளை திரட்டி முற்றுகையிடுவோம். அதற்கேற்ப போராட்டங்களை இந்த மாநாடு தீர்மானிக்க வேண்டியுள்ளது. இதன்மூலம் பேசாத அரசாங்கம் நம்முடன் பேச வரும் நிர்பந்தம் ஏற்படும். மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் பிரம்மாண்டமான பேரணி நடத்தி பின் மாநில அரசு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது. அத்தகைய போராட்டத்தை நோக்கி சென்னையில் கூடுவோம், மத்திய, மாநில அரசாங்கத்தை ஏற்க வைக்க வேண்டும் போன்ற போராட்ட திட்டத்தை வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.