ஈரோடு,
சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால், அதனை சுற்றியுள்ள கிராமங்களின் குடிநீர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில் 200க்கும் மேற்பட்ட சாய ஆலைகளும், 14 தோல் பதனிடும் தொழிற்சாலைகளும், இருப்பு ஆலை, டயர் புதுப்பிக்கும் ஆலைகள் இயங்கிவருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து பலதரப்பட்ட கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது. விதிமுறைப்படி தொழிற்சாலைகளே சுத்திகரிப்பு செய்து மறுசுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மாறாக கழிவுகள் நேரிடையாகவே நிலத்தில் வெளியேற்றப்படுகிறது.

குறிப்பாக, சாய மற்றும் தோல் சாலைகள் அனைத்துமே அனுமதி பெறப்பட்ட அளவைவிட பல மடங்கு அதிகமான நூலையும், தோலையும் பதனிடுகிறார்கள். இங்கு பெயரளவில் மட்டுமே சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. ஜிரோ சதவீதம் கழிவுநீர் வெளியேற்றம் முழுமையாக கிடையாது. ஆழ்துளை கிணறுகள் மூலமாக கழிவுகளை விடுகிறார்கள். குழி தோண்டப்பட்டு அதில் விடுகிறார்கள். மழை காலங்களில் மழை நீருடன் சேர்த்து வெளியேற்றப்படுகிறது. இன்னும் சில தொழிற்சாலைகள் டேங்கர் லாரிகள் மூலமாக கழிவுநீரை வெளியில் கொண்டு சென்று இரவு நேரங்களில் விவசாய நிலத்திலும், கிணறுகளிலும் விடுகிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைகிறது. இந்நீரை பயன்படுத்தும் மக்களுக்கு மலேரியா, சிக்கன்குனியா, டெங்கு போன்ற நோய் தொற்றுகள் ஏற்படுகிறது. இப்பகுதிகளில் 70 முதல் 100 அடிக்கு கீழ் நிலத்தடி நீர் மட்டம் உள்ளது. நீரின் உப்புத்தன்மை 3 ஆயிரம் டிடிஎஸ் முதல் 10 ஆயிரம் டிடிஎஸ் வரை உள்ளது. காற்று மாசின் அளவு 30 முதல் 50 புள்ளிகள் உள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் விரைவாக சிப்காட் பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து முறைகேடான முறையில் கழிவுகளை வெளியேற்றும் சாய மற்றும் தோல் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் பாதிக்கப்படும் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: