உடுமலை,
உடுமலையில் கூட்டுறவு சங்கதேர்தலில் அதிமுக மற்றும் திமுகவினர் ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதை விளக்கி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

உடுமலை தாலுகா குரல்குட்டை ஊராட்சியில் தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கியில் (எண் 1105) தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதையொட்டி கடந்த ஏப். 30ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். பின்னர் மே 3ம் தேதி வேட்புமனு இறுதி செய்ய வேண்டிய நிலையில், மாலை வரை வேட்புமனு பட்டியலை வெளியிட அதிகாரிகள் வரவில்லை.  இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், தேர்தல் அதிகாரியைகாணவில்லை என்ற புகார் மனுவை பெற்றுக்கொண்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதற்கிடையே, ஆளும் கட்சியான அதிமுக மற்றும் பிரதான எதிர்கட்சியான திமுகவினர் இணைந்து தங்களுக்குள் உடன்பாடு ஏற்படுத்தி கொண்டுள்ளனர். இதன்படி தங்களது வேட்பாளர்களை மட்டும் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்க முயன்று வருகின்றனர். அதிமுக மற்றும் திமுகவினரின் இந்த ரகசிய உடன்பாட்டை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குரல்குட்டை, மடத்தூர், மலையாண்டி பட்டிணம் பகுதிகளில் ஞாயிறன்று இருசக்கர வாகன பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்த பிரச்சார இயக்கத்திற்கு சிபிஎம் குரல்குட்டை கிளைச் செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கி.கனகராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.ஜெகதீசன், கிளை செயலாளர்கள் ஆனந்தன், சுந்தரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பிரச்சார இயக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்து அதிமுக- திமுகவின் ரகசிய கூட்டணியை அம்பலப்படுத்தி பேசியதுடன், ஆயிரக்கணக்கான நோட்டிஸ்கள் விநியோகிக்கப்பட்டன. இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த பிரச்சார இயக்கம் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து திங்களன்று நடைபெற இருந்த தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.