ஈரோடு,
கீழ்பவானி புன்செய் பாசனத்துக்கு கூடுதலாக 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி திங்களன்று ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழ்பவானி பாசனத்திற்குட்பட்ட 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் புன்செய் நிலங்களுக்கு ஏப்ரல்.27 ஆம் தேதி முதல் மே.9 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு 1.4 டிஎம்சி. தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த தண்ணீர் கடைமடை வரை சென்றடையாத நிலையில், குறைந்தளவிலான இந்த நீரும் விவசாய நிலங்களுக்கு போதிய அளவில் பிரித்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்திலுள்ள நீர் மின் அணைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நீரில் 2 டிஎம்சி-ஐ பெற்று மொத்தம் 3 டிஎம்சி. நீரை மேலும் 10 நாட்களுக்கு கூடுதலாக திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திங்களன்று அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் இ.ஆர்.குமாரசாமி தலைமை வகித்தார். கூட்டமைப்பு செயலாளர் கி.வடிவேல், மாநில துணைத் தலைவர் சி.எம்.துளசிமணி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் து.சுப்பு, பாசன விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் வி.எம்.கிருஷ்ணமூர்த்தி, தலைவர் கே.ஆர். தங்கராசு, சி.லோகுசாமி உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம், அனைத்து விவ
சாயிகள் சங்க கூட்டமைப்பைச் சார்ந்த விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: