கோவை,
சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாத மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்த முழுமை பெற்ற மனிதர் மெய்யான புரட்சிக்காரர் காரல் மார்க்ஸ் என பேராசிரியர் அருணன் புகழாரம் சூட்டினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு சார்பில் காரல் மார்க்சின் 200 ஆவது பிறந்தநாள் சிறப்பு கருத்தரங்கம் கோவை வரதராஜபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவ தலைவரும், மார்க்சிய சிந்தனைவாதியுமான பேராசிரியர் அருணன் பங்கேற்று மாமேதை மார்க்ஸ் குறித்து பேசுகையில், மாமேதை மார்க்ஸ் 200 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் 200 ஆண்டுகளுக்கு பிறகும் உலகம் முழுக்க விழா எடுத்து கொண்டாடப்படுகிறார்.

அவர் இறந்த பொழுது அவருடைய இறுதி நிகழ்ச்சியில் 11 பேர்தான். இன்று உலகம் முழுவதும் மார்க்சின் சிந்தனையை கொண்டாடுகிறது. இதேநாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் யெச்சூரி இங்கிலாந்திலும், லண்டன் போன்ற மாநகரங்களில் உள்ள பல்கழை கழகங்களில் மார்க்ஸ் குறித்து உரையாற்றிக் கொண்டிருக்கிறார். முதலாளித்துவம் பிறந்த நாட்டிலேயே அதனை ஒழிக்க பிறந்த மாமேதை மார்க்ஸ் குறித்து கருத்தரங்கங்கள், ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது. நான் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கிறபோது ஆர்எஸ்எஸ் பாஜகவினர் கம்யூனிசம் உலகம் முழுவதும் தோற்றுவிட்டது என விவாதத்தில் தெரிவிப்பார்கள். நான் யோசிப்பேன் இந்துத்துவா பற்றி உலகம் முழுவதும் மார்க்சை கொண்டாடுவதுபோல இப்படி வேறு எதையேனும் யாரேனும் பேசியதுண்டா. இந்துத்துவத்தின் சமரசமான ஆணாதிக்கம், சாதியும்தான். இதுகுறித்து யாரவது பேசுவார்களா, உலகம் முழுவதும் உள்ள உண்மையான அறிவுஜீவிகள் ஒன்றுகூடி இந்துத்துவா குறித்து பேசினால் காறித்துப்புவார்களே ஒழிய இதனை போற்ற மாட்டார்கள். ஆனால் காரல்மார்க்சையும், மார்கசியம் குறித்தும், கம்யூனிசம் பற்றியும் இன்று உலகமே பேசுகிறார்கள், ஆய்வுசெய்கிறார்கள். எதிராளிகள் கூட மார்க்சை பற்றி பேசித்தான் ஆக வேண்டிய சூழல். இதுதான் மார்க்சுக்கு கிடைத்த வெற்றி.

இவரை எந்த ஒரு மெய்யான அறிவு ஜீவியும் கடக்க முடியாது. மறுக்காமல் நடக்க முடியாது. அறிவுலக பயணத்தை மேற்கொள்ள முடியாது. தனிவாழ்வு, பொதுவாழ்வு, ஞானவாழ்விலும் முழுமை பெற்ற மனிதர் மார்க்ஸ். உலக மாந்தருக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். தனிவாழ்வில் ஜென்னியோடு இவர் வைத்த காதல், இவரோடு ஜென்னி வைத்த காதல் இதுகுறித்து படிக்க படிக்க இத்தகைய அருமையான ஜோடி இந்த பூவுலகில் வாழ்ந்திருக்கிறதே என்று பெருமிதம் கொள்ள வேண்டும். மேலும், நட்புக்கு இலக்கணமாய் மார்க்ஸ் ஏங்கல்சின் நட்பு அத்தகைய நட்பு உலகம் இதுவரை அறியவில்லை. அதேபோல தந்தை மகன் பாசம் மார்க்ஸ் போல் ஒரு பிள்ளை கிடைக்க ஒவ்வொரு தந்தையும் தவம் இருக்க வேண்டும். தந்தை மகன் என்கிற உறவை தாண்டி நெருக்கமான நட்பை கொண்டிருந்தவர். இவர்களுக்குள் என்றைக்குமே வேறுபாடு வந்ததில்லை. தந்தை மகன் என்கிற உறவாக இல்லாமல் தேர்ந்ததெடுத்த இரண்டு நண்பர்களின் உறவாகவே அது இருந்தது.

மார்க்ஸ் பல்கழை கழகத்தில் படிக்கும் பொழுது தான் தந்தைக்கு பக்கம் பக்கமாக கடிதம் எழுதுகிறார். நிறைவாக அப்பா என்னால் இக்கடிதத்தை முடிக்கவே முடியவில்லை. ஏனென்றால் இது உங்களுக்கான கடிதம். மெழுகுவர்த்தியின் வெளிச்சம் மங்கி வருவதால் கடிதத்தை முடிக்க வேண்டியதாய் உள்ளது என கடிதத்தை நிறைவு செய்து அடிக்குறிப்பில் அப்பா ஜென்னியிடம் சொல்லுங்கள் அவள் எழுதிய கடிதம் 12 முறை படித்தேன். இந்த உலகத்தில் ஒரு பெண்ணால் எழுதிய அழகிய கடிதம் இதுதான் என்று ஜென்னியிடம் என் காதலியிடம் சொல்லுங்கள் என தந்தையிடம் கடிதத்தில் தெரிவிக்கிறார். அப்படியென்றால் தந்தை மகன் உறவு எத்தகைய நெருக்கமாக இருந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அத்தகைய தனிவாழ்வுக்கு சொந்தக்காரர் காரல் மார்க்ஸ். மார்க்ஸ் என்றால் சிந்தனைவாதி, மேதை, ஒரு தத்துவத்திற்கு சொந்தக்காரர் என்கிற சித்திரம்தான் பொதுவாக காட்டப்படுகிறது. ஆனால் பொதுவாழ்விலே அவர் தீரர், நேரடியாக போராட்டகளம் கண்டவர். சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாதவர். மார்க்ஸ் முழுமையான மனிதர்.பொதுவாழ்வில் மார்க்ஸ் எப்படிப்பட்டவர் என்றால். அன்றைய நாளில் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் போராடுகிறார்கள். அப்போது மார்க்ஸ் எழுதுகிறார். இந்த அரசு மக்களை பட்டினி போடுகிறது. நாம் இந்த அரசை பட்டினிபோடுவோம் என்று எழுதுகிறார். அரசை எப்படி பட்டினிபோடுவது என்று கேட்கிறார்கள்.

அரசுக்கான உணவு வரிதான். ஆகவே வரிகொடா இயக்கத்தை நடத்துவோம் என்று பதிலுரைக்கிறார். வரிகொடா இயக்கம் இந்தியாவில் காந்தி தலைமையில்தான் நடைபெற்றது என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் 19 ஆம் நூற்றாண்டிலேயே ஐரோப்பிய நாட்டில் இத்தகைய போராட்டம் நடைபெற்றது. அதனை கச்சிதமாக எழுதியவர் மார்க்ஸ், இதை எழுதியதால் மார்க்ஸ் மீது வழக்கு போடுகிறார்கள். நீதிமன்றத்தில் தானே வாதாடுகிறார்கள். அப்போது மார்க்ஸ் நீதிமன்றத்தில் சொல்கிறார். ஆம் நான்தான் அதனை எழுதினேன். மக்களை இந்த அரசு பட்டினி போடுகிறது. இந்த அரசை பட்டினி போட வேண்டுமென்று எழுதினேன் என்று சொல்லுகிறார். மேலும், இந்த அரசு எதிர்புரட்சி நடத்துகிறது. மக்கள் புரட்சி நடத்தும் உரிமை மக்களுக்கு உண்டு என்று பதிலுரைக்கிறார். இதனைகேட்ட நீதிபதிகள் மார்க்சை விடுதலை செய்துவிட்டு அந்த உத்தரவின் கடைசி வரியில் எங்களுக்கு தெரியாத புதிய விஷயங்களை எங்களுக்கு சொல்லிக்கொடுத்ததற்காக உங்களுக்கு நன்றி என முடிக்கிறார்கள். நீதிபதிகளுக்கே பாடம் எடுத்தவர் நம்மவர் மாமேதை மார்க்ஸ். மெய்யான புரட்சிக்காரர்.

சொல்லும் செயலும் வேறு இல்லாதவரே மாமனிதர் மார்க்ஸ். இவரின் தனிவாழ்வுக்கும், பொதுவாழ்வுக்கும், ஞானவாழ்வுக்கும் உறுதுணையாக இருந்தவர் ஏங்கல்ஸ். இருவரும் இந்த சுரண்டல் சமுதாயத்தை ஒழிக்க புறப்பட்டவர்கள். அத்தகைய மகத்தான மாமனிதர் மார்க்சின் 200 ஆவது பிறந்த நாளை வருடம் முழுவதும் கொண்டாட இருக்கிறோம். மார்க்சியம் கற்போம். மார்க்சிடம் கற்போம் என்கிற உண்மையான முழக்கத்தை முன்வைத்து இருக்கிறோம். மரணம் இல்லா பெருவாழ்வு வாழ்ந்த மார்க்சை கொண்டாடுவோம். அவரின் சிந்தனையை மக்களிடம் கொண்டு செல்லும் மகத்தான பணியை முன்னெடுப்போம் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: