கோவை,
கட்டாயமாக திணிக்கப்பட்ட நீட்தேர்வில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோவை வந்த மாணவர்கள் பரபரப்பாகவும், துணைக்கு வந்த பெற்றோர்களுக்கு படபடப்புடனுமாக ஞாயிற்றுக்கிழமை கடந்து போனது.

பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் தொடர்பான படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளான நீட் தேர்வுகள் நாடு முழுவதும் ஞாயிறன்று நடைபெற்றது. இதன்படி கோவையில் நீட்தேர்வு நடைபெற்ற தேர்வு மையங்களுக்கு காலை ஆறு மணி முதலே மாணவர்கள் தங்களின் பெற்றோர்களோடு வந்து குவிந்தனர். காலை 7.30 மணிக்கு முதல் பிரிவாகவும், 8.30க்கு மற்றொரு பிரிவுமாக மாணவர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். கோவையில் 15 ஆயிரத்தி 690 மாணவ, மாணவிகள் மாவட்டம் முழுவதும் உள்ள 32 மையங்களில் இந்த தேர்வை எழுதினர்.நீட் தேர்வுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் தேர்வு மையத்தில் அதிகாரிகளின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்கிற ஒருவித பரபரப்புடனே நுழைந்தனர். தேர்வு மையத்தின் முன்பு பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டு, மாணவர்கள் முழுக்கை சட்டை அணியக்கூடாது, காலணிகளுக்கு பதிலாக செருப்புகள் மட்டுமே அணிய வேண்டும், மாணவிகள் கம்மல், தோடு, மூக்கூத்தி, வளையல்கள் உள்ளிட்ட நகைகள் அணியக்கூடாது. ஹீல்ஸ் செருப்புகள் போடக்கூடாது, தலையை இருக்க கட்டி செல்லக்கூடாது, தலைவிரி கோலமாக செல்ல வேண்டும். என்பன போன்ற கட்டுப்பாடுகளை தேர்வு மைய காவலர்கள் கறாறாக நடைமுறைப்படுத்தினர். ஆசிரியர்கள் மாணவர்களை தீவிர ஆய்வுக்கு பின்னரே உள்ளே அனுமதித்தனர்.

மாணவர் மயக்கம்:
தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் இயல்பான நிலையில் தேர்வு மையத்திற்கு செல்வதற்கு பதிலாக ஒருவித பரபரப்புடன் நுழைந்தனர். துணைக்கு வந்த மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளே அனுமதிப்பார்களா திருப்பி அனுப்பிவிடுவார்களா என்கிற படபடப்புடன் சாலையிலியோ காத்திருந்தனர். இந்நிலையில் கோவை கேந்திரிய வித்தியலாய பள்ளியில் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென ஆம்புலன்சு ஒன்று தேர்வு மையத்திற்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அன்னூர் புளியம்பட்டியை சேர்ந்த மாணவர் ஒருவர் படபடப்பின் காரணமாக தேர்வு மையத்தில் மயக்கமடைந்தது தெரியவந்தது. இதனையடுத்து கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதில் மாணவர் காலையில் உணவை எடுத்துக்கொள்ளாததும், பரபரப்புடனும் காணப்பட்டதால் மயக்கம் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: