தாராபுரம்,
தாராபுரம் பகுதி விவசாயிகளுக்கு நீராதாரமாக விளங்குவது ராஜவாய்க்கால். சாக்கடை கழிவுகள், மருத்துவமனை கழிவுகளால் மாசடைந்து வருகிறது. சென்னை கூவம் ஆறு போல தாராபுரத்தின் கூவமாக மாறும் முன் தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமராவதி ஆறு பாய்ந்து செல்லும் வழியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் வாய்க்கால்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தாராபுரம் சுற்றுவட்டாரத்தில் வாய்க்கால் பாசனத்திற்கு ஆதாரமாக விளங்குவது ராஜவாய்க்கால். பெரும்பள்ளம் என்ற இடத்திலிருந்து துவங்கி தாராபுரம் வழியாக பயணித்து முடிவில் தாராபுரம் அருகில் உள்ள உப்பாற்றில் கலக்கிறது. அதேபோல், அமராவதி ஆற்றில் இருந்து அலங்கியம் சீத்தக்காடு பகுதியில் துவங்கி மற்றொரு ராஜவாய்க்கால் தாராபுரம் வழியாக பயணித்து கருப்பம்பாளையம் என்ற இடம் அருகே மீண்டும் அமராவதி ஆற்றில் கலக்கிறது.

இந்த இரண்டு வாய்க்கால்களின் மூலம் தாராபுரம் தாலுகாவிற்குட்பட்ட பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளான அலங்கியம், தளவாய்ப்பட்டிணம், தாராபுரம், கொளிஞ்சிவாடி, கொளத்துப்பாளையம், வீராட்சிமங்கலம், கரையூர், ராமபட்டிணம், கருப்பம்பாளையம் உள்ளிட்ட சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பாசன பகுதிகள் பயன்பெற்று வருகின்றன. 5 ஆயிரம் பாசன பயிர்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் இந்த வாய்க்கால்கள் தற்போது கூவம் நதியை போல சாக்கடை கழிவுகளால் தொடர்ந்து மாசடைந்து வருகிறது. தாராபுரம் நகரில் உள்ள நகராட்சி சாக்கடை கழிவுநீர் மொத்தமாக இந்த வாய்க்காலில் கலக்கிறது. மேலும் , தாராபுரம் அரசு மருத்துவமனையின் மருத்துவ கழிவுகளும் வாய்க்காலில் கலந்து சாக்கடையாக மாறி வருகிறது. மேலும், நகரவாசிகள் கோழி இறைச்சி கழிவுகள், குப்பைகளையும் கொட்டுக்கின்றனர். வாய்கால் மேட்டில் அமர்ந்து மது அருந்தும் குடிகாரர்கள் பாட்டில்களையும் ,தண்ணீர் பாட்டில்களையும் வாய்க்காலில் வீசிசெல்கின்றனர். தற்போது , வாய்க்காலில் நீர்வரத்து இல்லாத சூழலில் சாக்கடை கழிவுகளால் வாய்க்கால் மாசடைந்து, வாய்க்கால் மட்டத்திலிருந்து 2அடி உயரத்திற்கு குப்பை கழிவுகளால் நிறைந்துள்ளது. அமராவதி அணையில் இருந்து வாய்க்காலில் நீர்வரத்து வரும்போது ,வாய்க்காலில் உள்ள கழிவுகள் நேரடியாக விவசாய நிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் விவசாய நிலங்கள் பாழாவதோடு பயிர்களும் பாதிக்கப்படுகிறது.

மேலும்,  மருத்துவ கழிவுகள் மனிதர்களுக்கு தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்களை உருவாக்கும் அபாயம் உள்ளது. தாராபுரம் நகராட்சி பூங்கா அருகில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் குவிந்துள்ளதால் நீர்வரத்து தடைபடும் நிலையும் உள்ளது. இதுகுறித்து பழைய ஆயக்கட்டு விவசாயிகள் தெரிவிக்கையில் ,வாய்க்காலில் கழிவு நீர் கலப்பது குறித்தும் கழிவுகளை அப்புறப்படுத்தி , வாய்க்கால் மட்டத்திற்கு தூர்வார வேண்டும் என பல முறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர். வாய்க்காலில் நீர்வரத்து வருவதற்கு முன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.