திருப்பூர்,
சூலூர் விமானப்படை தளத்தை விரிவாக்கம் செய்வதற்காக பல்லடம் வட்டத்தில் உள்ள சில கிராமங்களில் விவசாய விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட ள்ளதாக, அந்த நிலங்களை பத்திரப் பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பதை உடனடியாக நீக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பல்லடத்தில் இருந்து கோவைசெல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சூலூர் விமானப் படைதளம்அமைந்துள்ளது. இந்த விமானப்படைதளத்தின் தென்பகுதியில் கூடுதல் நிலங்களைக் கையகப்படுத்தி விரிவாக்கம் செய்ய இருப்பதாக கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக தகவல் உள்ளது. எனினும் இதுபற்றி விமானப் படையினரோ, அரசு நிர்வாகமோ முறையான அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை.இந்நிலையில் காங்கேயம் பாளையம், பருவாய், கலங்கல், காடம்பாடி, அப்பநாயக்கன்பட்டி உள்பட பல பகுதிகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அண்மையில் இந்த பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களுக்கு பத்திரப் பதிவு அலுவலகத்தில் “தடை செய்யப்பட்ட பகுதி”என்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாயகள் கூறுகின்றனர். இந்த தடை விதிக்கப்பட்டு இருப்பதால் விவசாயிகள் தங்கள் நிலங்களை வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெறவோ அல்லது நிலத்தை விற்பனை செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக முடிவில்லாமல் தொடரும் இப்பிரச்சனையில் உரிய தீர்வு காண்பதற்காக பல்லடம் வட்டம் பருவாய் கிராமத்தில் உள்ள தனியார் விவசாயி ஒருவரது தோட்டத்தில் மேற்படி பாதிக்கப்பட்ட விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பருவாய் ஊராட்சி முன்னாள் தலைவர் சின்னசாமி, விவசாயி மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் முன்னிலையில் உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கு.செல்லமுத்து பங்கேற்று பேசினார். இதில் பேசிய விவசாயிகள், விமானப் படை தளம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்த இருப்பதாக சொல்லப்படுவது பற்றி தெளிவாக, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நிலம் கையகப்படுத்துவதாக இருந்தால் அதற்கு விவசாயிகளுக்கு வழங்க இருக்கும் இழப்பீடு எவ்வளவு, சந்தை மதிப்பு உள்ளிட்ட விபரங்களையும் தெளிவுபடுத்திட வேண்டும். அதுவரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் விளைநிலங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக 10 நாட்களுக்குள் நில எடுப்புத் தெடர்பான ஆணையரை சந்தித்துப் பேசுவது என்றும், அதில் உரிய முடிவு ஏற்படாதபட்சத்தில் விவசாயிகள், பொது மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவது என்றும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று பருவாய் கிராம விவசாயிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.