திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சியில் ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் நகராட்சி அலுவலக கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி வெள்ளியன்று காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார்.
உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில், வெள்ளியன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.36.07 கோடி மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சித்திட்ட பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் காணொலி காட்சியின் மூலம் திறந்து வைத்தார்கள்.
அதே போல் , உடுமலைப்பேட்டை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதியில் பொது மக்களின் குடிநீர் தேவைக்காக ரூ.17.25 கோடி மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுடன் கூடிய குடிநீர் பகிர்மான குழாய்கள் அபிவிருத்தி பணிகள், ரூ.15.39 கோடி மதிப்பீட்டில் குடிநீர் பிரதான குழாய்கள் அபிவிருத்தி பணிகள் மற்றும் ரூ.3.43 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்திற்கு கூடுதல் அலுவலக கட்டடம் மற்றும் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் , தாராபுரம் நகராட்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் என ரூ.41.07 கோடி மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சியின் மூலம் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி , உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அசோகன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் சுல்தானா, மண்டல செயற்பொறியாளர் வெங்கடேஷ், உடுமலைப்பேட்டை நகராட்சி ஆணையாளர் சுதா, நகராட்சி பொறியாளர் தங்கராஜ், உதவி பொறியாளர் ஜான் பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.