===ஆர்.சிங்காரவேலு===
யுஐடிபிபி என்ற சர்வதேச கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தின் 11வது ஆசிய பசிபிக் பிராந்திய கூட்டம் நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் ஏப்ரல் 6, 7இல் நடைபெற்றது. ஆர்.சிங்காரவேலு (கட்டுரையாளர்) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஜப்பான், இந்தோனேஷியா, சைப்ரஸ், நேபாளம், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் 22 தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் (சிடபிள்யூஐ) சார்பில் ஆர்.சிங்காரவேலு, கே.வி.ஜோஸ், கே.பாலகிருஷ்ணன் (கேரளா), பன்வார்சிங் (ராஜஸ்தான்) மற்றும் சுபாஷிஸ் சன்யால் (மேற்குவங்கம்), ஏஐடியூசி சார்பில் கே.ரவி, விஜயன் குனிசேரி, ஏஐசிசிடியு சார்பில் சர்மா, பாலசுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்திற்கு முன்பாக ஏப்ரல் 5இல், மாறிய அரசியல் சூழலில் வளர்ச்சிக்கான சமூக பொருளாதார மாற்றங்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் 250 நிபுணர்கள், அரசியல் பொருளாதாரவாதிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், நேபாள நாட்டின் பல அமைச்சகங்கள், துறைகளிலிருந்து பங்கேற்றனர். 22 சர்வதேச தலைவர்களும் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

5000 பேரை உறுப்பினர்களாக கொண்ட நேபாள முற்போக்கு எஞ்சினியரிங் தொழில் நிபுணர்கள் சங்கம் (PEPAN) என்ற அமைப்புத்தான் கருத்தரங்கை நடத்தியது. முன்னாள் பிரதமர் ஜே.என். கனல், துவக்க அமர்வின் பிரதம விருந்தினர். கருத்தரங்கில் நேபாள நாட்டின் முன்னாள் உச்சமன்ற தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி, வளர்ச்சிக்கான நல்லாட்சி என்ற தலைப்பிலும், ருஐகூக்ஷக்ஷ பொதுச் செயலாளர் மிகாலிஸ் உள் கட்டமைப்பு பணிகள் அபிவிருத்தி பணிகளில் பாதுகாப்பு மற்றும் உடல் நலம் சார்ந்த அபாயங்கள் சர்வதேச பார்வை என்ற தலைப்பிலும், முன்னாள் அரசு செயலாளர் டாக்டர் பாலானந்தா சமஸ்டி அமைப்பு என்ற தலைப்பிலும், எரிசக்தி பொருளாதார நிபுணர், டாக்டர் என்.சௌலாகெய்ன் வளர்ச்சிக்கான எரிசக்தி பெருக்கம் என்ற தலைப்பிலும், அரசியல் பொருளாதார நிபுணர் டாக்டர் ஹரிரோகா புதிய நேபாளத்தின் அரசியல் பொருளாதாரம் என்ற தலைப்பிலும் அறிக்கைகள் சமர்ப்பித்து பேசினார்கள்.

10 ஆண்டுகளுக்கு முன்பு நேபாளத்தில் மன்னராட்சியே இருந்தது. நேபாளம் இந்து நாடு என அறிவிக்கப்பட்ட நாடு. பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் ஒருமுகப்படுத்தப்பட்ட (UNITARY) அமைப்பு முறையிலிருந்து சமஷ்டி அமைப்பு முறைக்கு நேபாளம் மாறியுள்ளது. ஒரே அரசு என்பதற்குப் பதில், 753 ஸ்தல ஸ்தாபனங்கள், 7 சட்டமன்றங்கள், ஒரு நாடாளுமன்றம் என மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு நேபாளம் ஒரு மதச்சார்பற்ற நாடு என அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றங்கள் இந்த அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஏற்பட்டுள்ளது. ஸ்தல ஸ்தாபன அமைப்புகள் மற்றும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி கைப்பற்றியது. மேலும் 6 சட்டமன்றங்களிலும் அந்த கூட்டணி வெற்றி பெற்றது. தற்போது ஒற்றுமைப்படுத்துவதற்கான குழு ஏற்படுத்தப்பட்டு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

நல்ல ஆட்சி, நிலையான ஆட்சி, துரித வளர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு மக்கள் மிகப் பெருவாரியாக வாக்களித்துள்ளனர். தற்போது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் திட்டமிடுதல் நடைபெறுகிறது. ஏராளமான உள்கட்டமைப்பு, அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ராணுவமும் இப்பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.

நேபாளத்தில் புனல் மின்சாரம் (நீர் மின் திட்டங்கள்) மூலம் 83000 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. இத்திட்டங்களை இந்திய அரசும் நேபாளமும் சேர்ந்து நிறைவேற்றினால், நம் நாட்டிற்கு மலிவான விலையில் மின்சாரம் இறக்குமதி செய்ய முடியும், தற்போது நேபாளத்தில் மின் சக்தி தேவைவை பூர்த்தி செய்ய 1232 மெகாவாட் மின்சாரம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அடுத்த 10ஆண்டுகளில் 15000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நேபாள அரசு திட்டமிட்டுள்ளது. இன்னும் சில ண்டுகளில் சமையல் எரிவாயுக்கு பதிலாக அங்கு மின்சாரத்தையே பயன்படுத்த முடியும்.

கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக்குழு உறுப்பினர் டாக்டர் விஜயா பௌடெல், போக்குவரத்து மற்றும் கட்டமைப்பிற்கான அமைச்சர் ரகுபிர் மஹாசேத் ஆகியோரும் பிரதம விருந்தினராக பங்கேற்று பேசினார்கள்.

நேபாள முற்போக்கு எஞ்சினியரிங் தொழில் நிபுணர்கள் சங்கத்தின் (PEPAN) தலைவர் சிரஸ்தா வரவேற்புரையாற்றினார். சர்வதேச கட்டுமான தொழிலாளர் சம்மௌன (யுஐடிபிபி) பொதுச் செயலாளர் மிகாலிஸ், அறிமுக ஆவணத்தை சமர்ப்பித்துப் பேசினார். டோக்கியோ நகரில் 2020ல் ஒலிம்பிக் போட்டியும், 2022 கத்தார் நாட்டில்உலக கால்பந்து போட்டியும் நடைபெறவிருக்கின்றன. இவற்றில் பணிபுரியும் கட்டுமானத் தொழிலாளருக்கு பணியிட பாதுகாப்பு மற்றும் உடல் நலம் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தக்கோரி யுஐடிபிபி சார்பில் சர்வதேச கால்பந்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பன்னாட்டு கம்பெனிகள் ஸ்டேடியம் கட்டும் பணிகளில் தொழிலாளரை கடுமையாக சுரண்டி வருகின்றன. ஏகாதிபத்திய தாக்குதலுக்கு எதிராக தேச அளவிலும், சர்வதேச அளவிலும் தொழிலாளி வர்க்கம் உஷாராக இருக்க வேண்டும். சுரண்டலற்ற சமுதாயம் உருவாக்க தொழிலாளி வர்க்கம் போர்க்குணம் மிக்க போராட்டங்களை நடத்த முன் வரவேண்டும்.

பிபான் பொதுச் செயலாளர் டாக்டர் மாதவ் பி.கொய்ராலா, நேபாள நாட்டின் பூகோள அரசியல் நிலைமை மற்றும் தொழிலாளர் பணி நிலைமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்தார். 2014இல் மட்டும் 5,20.000 நேபாளியர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்றனர். 2013இல் 726 இத்தகைய இடம் பெயர்ந்த தொழிலாளர் வெளிநாடுகளில் இறந்துவிட்டனர். 2015ல் 7.6 ரிக்டர் அளவு நில நடுக்கம் ஏற்பட்டதில் 9000 பேர் மடிந்தனர். 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். நேபாளத்தின் 2.96 கோடி தொழிலாளர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள்.

ஜப்பான் அறிக்கை
2020இல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான புதிய ஸ்டேடியங்கள் கட்டும் பணி அசுர வேகத்தில் நடைபெற்று வருவதால், தொழிலாளர்களின் வேலை நேரம் அதிகரித்து கடுமையாக வேலைப்பளு உள்ளது. இதன் காரணமாக விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன. 12.8 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர் ஜப்பானில் பணிபுரிந்து வருகின்றனர். 3 ஆண்டுகள் அவர்கள் பயிற்சியாளர்களாக குறைந்த ஊதியத்துடன் பணியாற்றுகிறார்கள்.

சிங்காரவேலு அறிக்கை
இந்தியாவின் இன்றைய நிலையை குறிப்பாக மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தினார். 10ஆண்டுகளாக நீடித்து வரும் உலக நெருக்கடிக்கு இன்னமும் தீர்வு ஏற்படவில்லை. தீர்வுக்கான முதலாளித்துவ நாடுகளின் முயற்சிகள் அடுத்து இன்னொரு நெருக்கடியை ஏற்படுத்தும் நிலைமைதான் உள்ளது. மக்களின் நலன்களை காவு கொடுத்து, தனியார்மயம், விவசாயிகள், பழங்குடி மக்களை அப்புறப்படுத்தி இயற்கை வளங்களை சூறையாடுதல் போன்ற பல வழிகளில் கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகள் கொள்ளை அடிக்கின்றன.

ஊக்குவிப்பது என்பதன் பேரால் இக்கம்பெனிகள் வரி விலக்கு பெறுகின்றன. வரி முறையில் உள்ள பலகீனங்களை பயன்படுத்தி, வரி கட்டாமல் ஏய்க்கின்றனர். பாஜக தலைமையிலான இந்திய அரசு,நவீன தாராளமயம், மதவாதம் மற்றும் யதேச்சதிகார கொள்கைகளை தீவிரமாக அமலாக்கி வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து, அமெரிக்காவின் இளைய ராணுவ பங்காளியாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் மார்ச் 19இல் வழங்கிய தீர்ப்பில் ரூ.28000 கோடிக்கு மேல் கட்டுமான தொழிலாளர் நல நிதி ஏன் பயன்படுத்தப்படவில்லை எனஅரசுகளுக்கு குட்டு வைத்துள்ளது.

கூட்ட முடிவுகள்
ஏகாதிபத்தியத் தலையீடுகள் மற்றும் தாக்குதல்கள் குறித்து தொழிலாளி வர்க்கத்தை உஷார்ப்படுத்த வேண்டும்.ஜப்பானில் அரசியல் சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடி வரும் தொழிற்சங்கங்களுக்கு யுஐடிபிபி தனது ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது. பெண்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் கோரி யுஐடிபிபி போராடும். வெளிநாடுகளில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர் பிரச்சனைகளில், அந்தந்த நாட்டு தொழிற்சங்கம் தலையிட்டு உதவிடவேண்டும். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, 2022 கத்தார் கால்பந்து போட்டி கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுவரும் தொழிலாளர் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும்.

இந்திய அரசின் மக்கள் விரோத தாராளமய, மதவாத எதேச்சதிகார கொள்கைகளை யுஐடிபிபி வன்மையாகக் கண்டிக்கிறது. கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு எதிரான வர்க்கப் போராட்டங்களை யுஐடிபிபி பலப்படுத்தும். பணியிட பாதுகாப்பு, சுகாதாரப் பிரச்சனைகளில் தொடர்ந்து தலையிடுவோம். உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் அமைப்பு தினமான அக்டோபர் 3இல் உரிய முறையில், தொழிலாளர்களை திரட்டி சமூகப் பாதுகாப்பு, ஜனநாயக உரிமைகளுக்காக போராடுவோம்.

Leave A Reply

%d bloggers like this: