சென்னை:
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அம்பேத்கர் விருது வழங்கப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்திருக்கிறது. இது குறித்து அக்கட்சி சார்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:-

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய ஆறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூக நீதிக்கும், தமிழ் மொழி மேம்பாட்டுக்கும் பாடுபடுகிற சான்றோரை சிறப்பிக்கும் விதமாக இந்த விருதுகளை அளித்து வருகிறோம். திமுக தலைவர் கலைஞர், புதுச்சேரி முதலமைச்சர் வெ. நாராயணசாமி, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முதுபெரும் தலைவர் இரா. நல்லக்கண்ணு, தி.க தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் பலருக்கும் இவ்விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 2018 ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் சான்றோரின் பட்டியலை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.அம்பேத்கர் சுடர்- கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.

பெரியார் ஒளி-ஆந்திரத்தைச் சார்ந்த மக்கள் பாடகர் கத்தார், காமராசர் கதிர்- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர், காயிதேமில்லத் பிறை- ‘வைகறை வெளிச்சம்’ இதழாசிரியர் மு. குலாம் முகமது, அயோத்திதாசர் ஆதவன்- மருத்துவர் அ. சேப்பன்(மறைவிற்குப் பின்), செம்மொழி ஞாயிறு- ‘பெருங்கவிக்கோ’ வா.மு. சேதுராமன் ஆகியோருக்கு வருகிற 15 ஆம் தேதி மாலை சென்னை காமராசர் அரங்கில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் அளிக்கப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தொல். திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

Leave A Reply

%d bloggers like this: