சென்னை:
அரசுகள் கார்ப்பரேட்டுகளின் எடுபிடியாக மாறிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
பல்வேறு பிரச்சனைகளுக்காக பல அரசியல் கட்சிகள் அவ்வப் போது பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன. கடந்த ஏப்ரல் மாதத்தில் காவிரி பிரச்சனைக்காக பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் வெற்றியில் பெரும் பங்கு வணிகர்களுக்கு உண்டு.

வேலை நிறுத்தத்தின் போது தங்களின் வணிகம் பாதிக்கப்படும் என்பதைப் பற்றி கவலைப்படாமல் கடைகளை அடைத்து அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து அனைத்துப் போராட்டத்திலும் முன்னணியில் இருப்பவர்கள் வணிகர்கள்தான்.

“உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள், நீங்கள் அடையப் போவது ஒரு பொன்னுலகம், இழக்கப் போவது அடிமைச் சங்கிலிகள்” என்று உலக உழைப்பாளிகளுக்கு அறை கூவல் விடுத்த காரல் மார்க்சின் 200 ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படும் இதே தினத்தில் வணிகர்கள் தினமும் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் சிறு தொழில்களை அழிக்க வேண்டும் என்ற கொள்கையை ஆட்சியில் இருப்பவர்கள் அமல்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். பன்னாட்டுக் கம்பெனிகளை சிறு வணிகத்தில் அனுமதித்து சிறு வணிகர்களை ஒழித்துக்கட்டவும் முயற்சி செய்து வருகிறார்கள்.
உலகமய கொள்ளையின் தொடர்ச்சிதான் இப்போது கொண்டு வரப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை. இதன் மூலம் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. ரூ. 2 லட்சம் கோடி வரி வசூல் செய்திருப்பது சாதனை அல்ல. இதுநாட்டு மக்களை அதிகம் கொள்ளையடித்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாகும்.

கருப்புப் பணத்தை ஒழிக்க பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்தார்கள். ஆனால் ஓராண்டு கழித்து எதிர்பார்த்த கருப்புப் பணம் வரவில்லை என்று நாடாளுமன்றத்தில் கூறுகிறார்கள். மத்திய பாஜக ஆட்சியின் நடவடிக்கையால் வணிகர்கள் மட்டுமல்ல கோடிக்கணக்கான மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் எடுபிடியாக மத்திய-மாநில அரசுகள் மாறிவிட்டன. எனவே வணிகர் உரிமை மாநாட்டைப்போன்று இந்த தேசத்தை மீட்பதற்கான உரிமை மீட்பு மாநாட்டை நடத்த வேண்டிய தேவையை ஆட்சியாளர்கள் உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். எனவே வணிகர்கள் எத்தகைய போராட்டங்கள் நடத்தினாலும் அதற்கு தோள் கொடுக்கும் தோழனாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திகழும்.இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.