ஜெனீவா:
ஏற்கெனவே ஒப்புக்கொண்ட அடிப்படையில்தான் உணவு மானியங்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும், ஒருபோதும் அதை மீற மாட்டோம் என்றும் உலக வர்த்தக அமைப்பிடம் (World Trade Organization) மத்திய பாஜக அரசு மீண்டும் உறுதி அளித்துள்ளது.

வளரும் நாடுகளில் உணவுப் பொருட்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மானியங்களை முழுமையாக ரத்து செய்ய வைப்பதற்கு, அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதற்கு, உலக வர்த்தக அமைப்பை பயன்படுத்தி அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.உணவுக்கான மானியங்களை ரத்து செய்ய வைப்பதன் மூலம், இந்தியாவில் வேளாண் உற்பத்தியை அழிப்பதுடன், 120 கோடி மக்களை உணவுக்காக அமெரிக்காவிடம் கையேந்த வைப்பதே இதன் நோக்கமாகும்.அந்த வகையில், 1986-1988 காலகட்டத்தில் செய்யப்பட்ட விவசாய உற்பத்தியின் மொத்த மதிப்பிலிருந்து 10 விழுக்காட்டுக்கு மேல் மானியங்கள் அளிக்கக் கூடாது; இந்த மதிப்பீடும் அமெரிக்க டாலர் மதிப்பீட்டின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது உலக வர்த்தக அமைப்பின் நிபந்தனையாக உள்ளது.

இந்திய அரசும், மொத்த உற்பத்தியில் 10 விழுக்காட்டிற்குள் அளிக்கப்படும் மானியங்களை கேள்விக்கு உள்ளாக்கக் கூடாது என்று உலக வர்த்தக அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.ஆனால், இதிலும் தலையிட்ட உலக வர்த்தக அமைப்பு, அனைத்து வளரும் நாடுகளும் கடந்த ஆண்டு (2017) வரை அந்தந்த நாடுகளில் அளிக்கப்படும் மானியங்களின் அளவை உலக வர்த்தக அமைப்புக்கு அறிக்கையாகத் தெரிவிக்க வேண்டும்; அப்படி அளிக்கத் தவறும் நாடுகள் புதிதாக எந்த மானிய திட்டங்களையும் அவர்களது நாடுகளில் தொடங்கக் கூடாது என்று அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.ஆனால், அதைப்பற்றி எந்த எதிர்க்கேள்வியும் கேட்காத மத்திய பாஜக அரசு இதையும் ஏற்றுக்கொண்டு உலக வர்த்தக அமைப்பின் எந்த நிபந்தனைகளையும் இதுவரை மீறவில்லை என்று தற்போது உறுதிமொழிப் பத்திரம் அளித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.