மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான மோடி அரசு அந்நிய நாட்டு முதலாளிகளுக்கு ஏஜெண்டுகளாக செயல்படுவதாக காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் வணிகர் சங்கத்தலைவர் த.வெள்ளையன் குற்றம் சாட்டினார்.

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் 35வது மாநில மாநாடு காஞ்சீபுரம் பல்லவன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமையன்று (மே 5) நடைபெற்றது. இந்த
மாநாட்டுக்கு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.தேவராஜ் வரவேற்றார். மாநில பொருளாளர் வி.ரத்தினம் மாநாட்டு தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.

இந்த மாநாட்டில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா
பேசுகையில்,“ குஜராத்தில் முதல்வராக இருந்த போது மோடி ஜிஎஸ்டியை கடுமையாக எதிர்த்தார். ஆனால், பிரதமரானதும் அவரே அதை நிறைவேற்றினார்” என்றார். மத்திய அரசு ஜி.எஸ்.டி மூலம் வணிகர்க ளுக்கும் இ-நுகர்வோர்க ளுக்கும் பெரும் இன்னல்களை அளித்துவருகிறது. ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பிறகு இதுவரை அதில் 356 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஜி.எஸ்.டி.யை அப்புறப்படுத்தவேண்டும். இல்லையேல் நுகர்வோரும் ,வணிகர்களும் நிம்மதியாக இருக்க இதனைக் கொண்டு வந்த அரசைத்தான் மாற்ற வேண்டும் என்றும் வேண்டு
கோள்விடுத்தார்.

மக்களவை உறுப்பினர் சத்ருகன் சின்ஹா,“நீங்கள் பாஜகவில் இருந்து கொண்டே அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களையும், அதன் அரசையும் விமர்சனம் செய்கிறீர்களே என்று கேட்கின்றனர். இந்த நாடு ஜனநாயக நாடு. நான் கட்சியை விட இந்த நாடு பெரிதென்று நினைக்கிறேன். அதனால்தான் நாட்டுக்காக விமர்சனத்தை முன் வைக்கிறேன். உங்களுக்கு நாங்கள் எப்போதும் தோள் கொடுப்போம்” என்றார்.
த.வெள்ளையன்,“ வெளிநாட்டுக் குளிர்பானங்களை அரசு தடை செய்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யவில்லை. இந்த மாநாட்டில் மத்திய அரசுக்கு நாங்கள் எந்தக் கோரிக்கையும் வைக்கப்போவதில்லை. அவர்களுக்குக் கோரிக்கை வைப்பதால் எந்த பயனும் இல்லை”என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு,“ நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் பலர் பசி பட்டினிகளை அனபவித்தோம் அப்போது நம் நாட்டில் பொருளாதார வளர்ச்சி இல்லை. ஆனால் இப்போது அனைத்து வசதிகள் இருந்தும் பசி பட்டினியில் இருக்கின்றோம். விவசாயத்தையும், வணிகத்தையும் அழிக்க நினைக்கும் அரசுக்கு எதிராகக் கடுமையான போராட்டத்தை
நடத்த வேண்டும்” என்றார்.

தீர்மானங்கள்

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை தூத்துக்குடியில் இருந்து அகற்ற வேண்டும், தமிழக மக்களைத் தொடர்ந்து வஞ்சிக்காமல் உடனடி யாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், மத்திய அரசு புதிய விதைச்சட்டத்தை கைவிட வேண்டும்.
ஜிஎஸ்டி, வரிவிதிப்பு பண மதிப்பிழப்பினாலும், அந்நிய முதலீட்டால் அழிந்து வரும் உள்நாட்டு சில்லறை வணிகத்தை பாதுகாக்க வேண்டும், ஆன்லைன் வணிகத்தைக் கைவிட வேண்டும், உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் 2016ஐ கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 29 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.