திருப்பூர்,
திருப்பூரில் வேலை செய்து வரும் இளைஞர் ஒருவர் முகநூலில் பிரதமர் மோடி படத்தை தவறாக சித்திரித்ததாக காவல் துறையினர் அவசர அவசரமாக கைது செய்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி என்பவர் கடந்த 2ஆம் தேதி அன்று மோடியை திருப்பூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் தனது முகநூல் கணக்கில் தவறாக சித்திரித்திருப்பதாகக் கூறி நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் மாநகர காவல் துறையில் புகார் அளித்தார். இந்த புகார் மனு மீது வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் விசாரணை செய்து பிரபாகரன் (வயது 23) என்பவரை வியாழக்கிழமை கைது செய்தனர். இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். தற்போது திருப்பூர் மாநகரம் எஸ்.வி.காலனி, நான்காவது வீதியில் வசித்துக்கொண்டு, வீரபாண்டி குப்பாண்டம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

பாஜக மாவட்டத் தலைவர் 2ஆம் தேதி புகார் கொடுத்த உடனே தனிப்படை அமைத்து அவசர அவசரமாகச் செயல்பட்டு அடுத்த நாளே மேற்படி பிரபாகரன் என்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளது கவனிக்கத்தக்கது.சமூக வலைத்தளங்களில் பிரதமர் உள்ளிட்ட அரசுப் பதவிகளில் இருப்போர் மீது அவர்களது கொள்கைகள் காரணமாக பல்வேறு விதமான விமர்சனங்கள், கருத்துச் சித்திரங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த சூழலில் மோடி மீதும், பாஜகவினர் மீதும் இத்தகைய விமர்சனங்கள், கருத்துப் படங்கள் வெளியிடுவதை அச்சுறுத்தி தடுக்கும் விதத்தில் காவல் துறையின் கைது நடவடிக்கை அமைந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். அதேசமயம் , பெண் பத்திரிகையாளர்களை தரந்தாழ்ந்து சமூக ஊடகத்தில் கருத்து வெளியிட்ட பாஜகவின் எஸ்.வி.சேகர், தமிழகத்தின் முக்கிய தலைவர்களை கேவலமாக விமர்சிக்கும் பாஜகவின் எச்.ராஜா போன்றோர் மீது கடும் கண்டனங்கள் எழுந்தபோதும், பாஜகவைச் சேர்ந்த இவர்களைப் போன்ற வேறு சிலரும் சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் கருத்துகள், தகவல்களைப் பரப்பியபோதும் தமிழக அரசும், காவல் துறையும் பாராமுகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் , சமூக ஊடகத்தில் மோடியை தவறான படமாக சித்திரித்ததாக அப்பாவி இளைஞர் ஒருவரை கைது செய்து காவல் துறையினர் துரிதகதியில் நடவடிக்கை எடுத்திருப்பது, காவல் துறை பாரபட்சமாக செயல்படுவதையும், தமிழக அரசின் மூலம் மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களின் கைப்பாவையாக இத்துறை செயல்படுவதையும் உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.