கோவை,
கோவை அன்னூரில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கிய குழியில் விழுந்து சிறுவன் பலியான சம்பவத்தை தொடர்ந்து, பேரூராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 ஆவது வார்டு பகுதியில் இந்திரா நகர் அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனத்த மழையின் காரணமாக அப்பகுதியில் முழுவதும் மழை மற்றும் சாக்கடை நீர் தேங்கி குளம்போல் காட்சியளித்து வருகிறது. இந்நிலையில் வியாழனன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சோமசுந்தரம், சாந்தாமணி தம்பதியினர் மகன் மனோஜ்குமார் என்ற பத்து வயது சிறுவன் சாக்கடை, மழைநீர் தேங்கிய குழியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் சிறுவனின் மரணத்திற்கு பேரூராட்சியின் அலட்சிமே காரணம் என்றும், பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரியும் வெள்ளியன்று பேரூராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். இப்போராட்டத்தில் கட்சியின் ஒன்றிய செயலாளர் முகமதுமுசீர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணிகண்டன், சுகுமார், சரவணன், மகேந்திரன், கபீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்தை நடத்தப்பட்டது. இதில் பலியானசிறுவனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: