ஈரோடு,
புனிதத்தால் மட்டும் நாடு வளராது, எதையும் கேள்விக்கு உட்படுத்தும்போது தான் வளர முடியும் என ஈரோட்டில் நடைபெற்ற தமுஎகச விழாவில் கவிஞர் நந்தலாலா தெரிவித்தார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட 7 ஆவது மாநாட்டை முன்னிட்டு கலை இலக்கிய இரவு வியாழனன்று வீரப்பன்சத்திரம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தி.தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் என்.சங்கரன் முன்னிலை வகித்தார். இதில் மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா பங்கேற்று பேசுகையில்:- சமஸ்கிருதம் மொழி உயர்ந்தது என கூறுகிறார்கள். ஆனால், கோவில்களில் உண்டியல் என்று ஏன் தமிழில் எழுதுகிறார்கள். எங்கே காசு போடுவார்களோ, அங்கே தமிழில் எழுதுகிறார்கள். இதேபோல், இந்து மதத்தில் எந்த கடவுளுக்கும் பெண் குழந்தை கிடையாது. கிறிஸ்த்துவ மதத்தில் உள்ள சீடர்களில் பெண் இல்லை. இஸ்லாமியத்தில் ஒருபெண் நபி கூட கிடையாது. ஆக, எந்த மதமும் பெண்களைஏற்கவில்லை.

ஆனால், பெண்களை உலகம் முழுவதும் பாதுகாத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகளும், முற்போக்கு சிந்தனையாளர்களும் தான். இந்தியாவில் சாதி, மதங்களால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக சாதி, மதங்களை மீறியவனால் தான் எல்லா முன்னேற்றமும் ஏற்பட்டது. இந்தியாவில் தற்போது உச்சநீதிமன்றம் துவங்கி பல்கலைக்கழகங்கள் வரை சீரழிக்கப்பட்டு விட்டது. உயர் கல்வி நிறுவனங்கள் கெட்டு அழுகி நாற்றம் எடுப்பதன் விளைவுதான் நிர்மலா தேவி போன்றவர்களின் வரலாறு. இந்தியா என்ற பெருநாடு புனிதங்களை கட்டி அழுதால், முன்னேற முடியாது. உலகில் உள்ள நீளமான ஆறுகில் ஒன்று கூட இந்தியாவில் ஓடவிலை. ஆனால், உலகில் போற்றப்படும் 15 புனித நதிகளில் 12 நதிகள் இந்தியாவில் ஓடுகிறது. புனிதம் என சொல்லாதவர்கள் ஆற்றைஆறாக பாதுகாத்தார்கள். மாறாக, புனிதம் என கூறியவர்கள் ஆறுகளை சாக்கடையாக மாற்றியுள்ளனர். எதையும் புனிதமாக்கும் போது நாடு வளரவே முடியாது. எதையும் கேள்விக்கு உட்படுத்தும்போது தான் வளர முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, இந்த கலை இரவில் புதுகை பூபாளம், கரிசல் கருணாநிதி மற்றும் திருப்பூர் கலைக்குழுவினரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.