இராமேசுவரம்:
இராமேசுவரம் தீவுப்பகுதியில் நிலத்தடி நீரை பாதிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இறால் பண்ணைகளை அகற்ற கோரி 12 கிராமங்களை சேர்ந்த 1200- க்கும் மேற்பட்ட பொது
மக்கள் வெள்ளியன்று தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராமேசுவரம்,தங்கச்சிமடம்,பாம்பன் உள்ளடக்கிய தீவுப்பகுதியில் 75 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் நாள் தோறும் சுற்றுலா பயணிகள்,
பக்தர்கள் என 25 ஆயிரம் பேர் வருகை தருகின்றனர். இந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களின் 70 சதவீதம் பேர் நிலத்தடி நீரை குடிக்க பயன்படுத்துகின்றனர். மேலும் 25 சதவீதம் பேர் காவிரி கூட்டுக் குடிநீரை பயன்படுத்துகின்றனர். மேலும் தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட அரியாங்குண்டு,மெய்யம்புளி,செம்மமடம் உள்ளிட்ட சில இடங்களில்
மட்டுமே நிலத்தடி நீர் குடிக்க பயன்படுத்த முடியும். இந்நிலையில்,நிலத்தடி நீரை பாதிக்கும் விதமாக கடலோர பகுதியில் அதிகாரிகள் துணையோடு சட்ட விரோதமாக இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் நிலத்தடி தண்ணீர் உப்புத்தன்மை ஏற்படுகிறது. இதனை தடுக்க மாங்காடு,சம்பை,வடகாடு,அரியாங்குண்டு,குடியிருப்பு,சுடுகாட்டாம்பட்டி உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இது வரையில் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, 12 கிராமங்களை சேர்ந்த 1200- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி,சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.கருணாகரன்,மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட துணைத்தலைவர் இ.ஜஸ்டீன்,மாவட்ட பொருளாளர் எம்.பி.செந்தில்,தாலுகா செயலாளர் ஜஸ்டீன், சிபிஎம் தாலுகா செயலாளர் ஜி.சிவா, மற்றும் கிராம தலைவர்கள் அருள்ராஜ்,ஆரோக்கியராஜ்,சுந்தர்ராஜன்,சுப்பிரமணி,முனியாண்டி மற்றும் மணிகண்டன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

தாலுகா அலுவலகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றதால் வருவாய் கோட்டாட்சியர் சுதன்,காவல்துறை துணைகண்காணிப்பாளர் இளங்கோ,வட்டாட்சியர் சந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள இறால் பண்ணைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,சட்டபூர்வ அனுமதி பெறாமல் உள்ள அனைத்து இறால் பண்ணைகளை ஒரு மாதத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அனுமதி அளித்துள்ள 10 இறால் பண்ணைகளில் கள ஆய்வு செய்து விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களில் புதிய இறால் பண்ணைகள் அமைக்க அனுமதி வழங்கப்படமாட்டாது என வருவாயத்துறை அதிகாரிகள் எழுத்து பூர்வமாக உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டதை விலக்கிக்கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.