போடி:
மோடி அரசு, தமிழகத்தை காலில் போட்டு மிதிக்கிறது என போடி பொதுக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேனி மாவட்டம் போடியில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் நீண்ட காலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் மத்திய அரசு கர்நாடக தேர்தலை மனதில் வைத்து வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறது . பிரதமர், அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் வரைவு திட்டத்தை தயாரிக்க முடியவில்லை என கால அவகாசம் கேட்டு மனுக்கொடுத்துள்ளனர் .இது உச்சநீதிமன்றத்தை சிறுமைப்படுத்தும் விசயம் . இந்த விஷயத்தில் மோடி அரசு, தமிழகத்தை திரும்பத் திரும்ப காலில் போட்டு மிதித்து வருகிறது . டெல்டாவில் உள்ள 5 மாவட்ட பிரச்சனை அல்ல காவிரி. காவிரியில் தமிழகத்திற்கு உரிமை இருக்கிறது என நடுவர் மன்றம்.உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில் மோடி மட்டும் ஏற்கவில்லை.தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்ததைக் கண்டிக்க முடியாத பாஜக தமிழகத்திற்கு தேவையா ?தமிழகத்தை காட்டிக் கொடுப்பதற்கு பொன் .ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அமைச்சர் பதவி தேவையா ?தமிழக மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை இருக்கிறது

என்று சொன்னால் பொன் .ராதாகிருஷ்ணன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் .
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வு வேண்டாம் என்று தொடர்ந்து போராடி வருகிறோம் . நீதிமன்றத்தை காரணம் காட்டி நீட் தேர்வை அமலாக்கினர் . ஆனால் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் கேரளா ,ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுத வேண்டும் என சொல்வது எந்த வகையில் நியாயம்? நீதிமன்றம் அந்தந்த மாநிலத்தில் தேர்வு எழுதலாம் என சொன்ன நிலையில் மேல் முறையீடு செய்து மாணவர்களை திக்குமுக்காட வைத்தது சரியா ?தமிழகத்தில் யாரும் மருத்துவப் படிப்பு படிக்கக்கூடாது எனற மோடியின் துரோக நடவடிக்கையே இதற்கு காரணமாகும் .

பண மதிப்பிழப்பு -ஜிஎஸ்டி
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவேன் , வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு நபருக்கும் ரூ.15 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்துவேன் என்று
கூறி தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கழிந்த பின்னரும் மோடி எந்த வாக்குறுதியையும் காப்பாற்றவில்லை. மாறாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்து உள்நாட்டுத் தொழில்களை அழித்து பல கோடிப் பேரின் வேலை வாய்ப்பைப் பறித்துவிட்டார். ஜிஎஸ்டி வரியை விதித்து அரசுக்கு வருவாயை உயர்த்தி வியாபாரத்தையும், சிறுதொழிலையும் முடக்கிவிட்டதுதான் நடந்துள்ளது .

நல்ல உள்ளம் படைத்தவர்களே, பாஜகவை விட்டு வெளியேறுங்கள்!
38 இஸ்லாம் குடும்பங்களை வெளியேற்ற ,காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமியை ,புனிதமாக கருதி வழிபடும் கோவில் கருவறையில் வைத்து 5 நாட்களாக இந்து மதவெறியர்கள் 8 பேர் கும்பலாக சீரழித்த கொடுமை நடந்துள்ளது.காவல் அதிகாரி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என அந்த மாநிலத்தில் உள்ள பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினார்கள். சிறுமி பாலியல் வன்கொலை கொலை செய்யப்பட்ட சம்பவத்தை காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும் ,சட்டமன்ற உறுப்பினருமான யூசுப் தாரிகாமி வெளிக்கொண்டு வந்த பின்னர்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதே போல உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னாவ் என்ற இடத்தில் வேலை கேட்டு சென்ற இளம்பெண்ணை அந்த மாநில பாஜக எம்எல்ஏவும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தப்பித்துச் சென்று அந்த பெண் அவரது தந்தையிடம் சொல்கிறார். பதறிய அவர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார் . எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்யாமல் காவல்துறை அவரது தந்தையை அடித்து சித்ரவதை செய்தது. அதில் அடி தாங்க முடியாமல் இறந்து விடுகிறார் .

இப்படிப்பட்ட கொடூரமான செயல்களில் ஈடுபடும் ஆட்கள்தான் பாஜகவில் பதவியில் உள்ளனர். மத மோதலை உருவாக்கி அரசியல் அதிகாரத்தை பிடிப்பதுதான் பாஜகவின் கொள்கை. இப்படிப்பட்ட கட்சியில் இருக்கும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் வெளியேற வேண்டும்.

தட்டிக் கேட்க திராணியற்ற முதல்வர்
தமிழகத்தில் அமைச்சர்கள் முதல் கீழ் நிலையில் உள்ள அதிகாரிகள் வரை கல்லா கட்டும் வேலையில் இறங்கியுள்ளனர் .அம்மா அரசு என்று சொல்லிக் கொண்டு ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டனர் .

தில்லி சென்ற முதல்வர் , காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் இழைத்த மோடியை கண்டித்து ,உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு மோடி வீட்டிற்கு முன் உண்ணாவிரதம் இருக்க வேண்டாமா ?தமிழகத்தின் உரிமைகளை அவர்கள் காவு கொடுத்து வருகிறார்கள் .மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகச் சொல்லும் இவர்களால் ஒக்கி புயலுக்கோ ,வறட்சி நிவாரணத்திற்கோ , வெள்ள நிவாரணத்திற்கோ தேவையான நிதியை பெற முடிந்ததா ? முடியவில்லை. மாறாக இணக்கமாக இருப்பது சிபிஐ ,வருமான வரி சோதனைக்கு பயந்துதான் .

நிர்மலா தேவி ஆடியோ
பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் ஆளுநர் உள்ளிட்ட நபர்கள் மீது எப்படி விசாரணை நடத்த முடியும் .குற்றம்சாட்டப்பட்ட நபரே எப்படி விசாரணைக் கமிஷன் அமைக்க முடியும் .எனவே உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட புலன் விசாரணை நடத்த வேண்டும். இதை வலியுறுத்தி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவோம் .

குட்கா விவகாரம்
குட்கா விவகாரத்தில் நன்கு விசாரணை செய்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு
உத்தரவிட்டுள்ளது .எனவே டைரியில் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர்கள் ,காவல் அதிகாரிகள் அனைவரும் கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தான் தமிழக முதல்வர் தில்லி சென்றுள்ளார்.இவ்வாறு அவர் பேசினார்.

பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கே.பாண்டியன் தலைமை வகித்தார் . மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன் , மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ராஜப்பன், டி.கண்ணன் , தாலுகா செயலாளர் எஸ்.செல்வம் ,மாவட்டக்குழு உறுப்பினர்கள் தங்கப்பாண்டி ,மீனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Leave a Reply

You must be logged in to post a comment.