திருப்பூர்,
திருப்பூரில் வியாழனன்று பெய்த மழைக்கு ஹார்வி சாலையில் உள்ள தொழிற்பேட்டையில் கோடிக்கணக்கான மதிப்பிலான துணிகள் மழையில் நனைந்து சேதமானது.

திருப்பூரின் மைய பகுதியான பேப்ரிகேசன் சாலையில் உள்ள தொழிற்பேட்டையில் சுமார் 50 செட்களில் தொழிற்கூடங்கள் இயங்கி வருகிறது. இதில் பேப்ரிகேசன், நிட்டிங், பிரிண்டிங் மற்றும் பனியன் தையல் கூடங்கள் பெருமளவில் இயங்கி வருகிறது. மேலும், சிலர் சொந்தமாக கட்டிடங்களை வாங்கியும், சிலர் வாடகைக்கு கட்டிடங்களில் தொழில்கள் நடத்தி வருகின்றனர். இந்த தொழிற்பேட்டை திருப்பூரின் மையப் பகுதியான புஸ்பா தியேட்டர் பின்புறம் மிகவும் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் , வியாழனன்று திருப்பூரில் பெய்த பலத்த மழையால் சாலையெங்கும் மழைநீர் தேங்கி ஆங்காங்கே சிறிய குளங்கள் தோன்றின. இந்த மழையில் மேற்குறிப்பிட்ட தொழிற்பேட்டைகளும் தப்பவில்லை. தாழ்வான பகுதியில் அமைந்தல் தொழிற்பேட்டை முழுவதும் மழைநீரால் சூழ்ந்தது. மேலும், அருகிலுள்ள லட்சுமி நகர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாக்கடை கழிவுநீர் அனைத்தும் தொழிற்பேட்டையை கடந்துதான் செல்ல வேண்டும் என்கிற நிலையில், சாக்கடைகள் அனைத்தும் நிரம்பி தொழிற்பேட்டையை நோக்கி பெருக்கெடுத்தது. இதேபோல் சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் பாலம் கட்டப்பட்டடது.

இப்பணிகளையொட்டி அப்பகுதியிலிருந்த சாக்கடைகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. தற்போது பெய்த மழையின் காரணமான அந்த சாக்கடை கழிவுகளும் தொழிற்பேட்டையில் புகுந்து அப்பகுதியே பெரும் சுகாதார சீர்கேட்டை உண்டாக்கும் மையமாகமாறியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசிவருகிறது. இதோடு மட்டுமின்றி மழைநீர் மற்றும் சாக்கடை கழிவுகளால் தொழிற்பேட்டையில் இருந்த இயந்திரங்களில் நீர் புகுந்து பழுதாகின. மேலும், பின்னலாடை உற்பத்திக்காக வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்கள் மற்றும் ஏற்றுமதிக்கு தயாராக இருந்த பின்னலாடைகளும் மழைநீரில் நனைந்து சேதமாகியது. இதன் மதிப்பு பல கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள தொழில் முனைவோர் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அதேநேரம், லட்சுமி நகர் பகுதியிலிருந்து ஹார்வி சாலையை இணைக்கும் பகுதியில் சாக்கடை அமைக்க அங்குள்ள பின்னலாடை நிறுவனங்கள் சார்பில் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை மாநகராட்சிக்கு வழங்கினர். இருந்தபோதும் இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் முறையான திட்டமிடல் இல்லாமல் சாக்கடை கால்வாய்களை அமைத்ததே தொழிற்பேட்டைக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடகாரணம் என அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரிண்டிங் வைத்திருக்கும் தீபன் என்பவர் கூறுகையில், நாங்கள் இந்த பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே பலமுறை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரிடமும் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மறியல் போராட்டமும் நடத்தினோம். அப்பொழுது மாநகராட்சி ஆணையாளர், சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், விஜயகுமார் ஆகியோர் நேரில் வந்து இடங்களை பார்வையிட்டு பிரச்சனைக்கு உரிய தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் , இன்றைய தினம் வரை அவர்கள் இது சம்ந்தமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு முன்பு இந்த மண்டலத்தின் உதவி பொறியாளராக இருந்த ராமமோகனிடம் பலமுறை இது குறித்து சொல்லியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சிறிய அளவு மழைக்கே இப்படி என்றால், அடுத்து வரும் பெரும் மழை காலத்தில் இந்த பகுதியில் தொழில் நடத்துவதே முடியாத சூழல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது என தெரிவித்தார்.

இதுகுறித்து சிட்கோ தொழிற்பேட்டையின் நிர்வாகியான ராமமூர்த்தி கூறுகையில், லட்சுமி நகர்பகுதியிலுள்ள சாக்கடையை விட இந்த சிட்கோ பகுதியிலுள்ள சாக்கடை மிகவும் மட்டம் குறைவாக உள்ளதால் இதுபோன்று மழை நீர் தொழில் நிறுவனங்களுக்குள் புகுந்து விடுகிறது. மேலும், பாலப்பணிகளுக்காக சாக்கடை கால்வாய்களை மூடினால் அந்த தண்ணீர் மீண்டும் எதிர் திசையான சிட்கோ தொழிற்கூட பகுதிக்குள் தான் வரும் என்று பாலம் வேலை நடக்கும் பொழுதே நாங்கள் அதிகாரிகளிடம் முறையிட்டோம். அதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் நாங்கள் மீண்டும் அதை சரிசெய்து தருகிறோம் என்று கூறினார்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பின்பு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் நேரில் வந்து இந்த இடங்களை பார்வையிட்டு சட்டமன்றத்தில் நிதி ஒதுக்கி இந்த பிரச்சனையை சரி செய்து தருவதாக கூறினார்.

ஆனால் அவரும் உறுதியளித்தபடி எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, இதன்பின்னராவது சரியான நடவடிக்கை எடுத்து சாக்கடை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நான் ரொம்ப பிஸீ;
இப்பிரச்சனை தொடர்பாக திருப்பூர் இரண்டாவது மண்டல உதவி பொறியாளர் ஆறுமுகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கையில்; அந்த பகுதிக்கெல்லாம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலை செய்யப்படும் என்று பதில் கூறினார். அதேநேரம், இதற்கு ஒதுக்கப்பட்ட நிதி சமந்தமாக எனக்கு எதுவும் தெரியாது எனக்கூறி உடனடியாக அழைப்பை துண்டித்துவிட்டார். இதைத்தொடர்ந்து மாநகராட்சி பொறியாளர் தமிழ்செல்வனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்தபோது, நான் மீட்டிங்கில் இருப்பதால் பின்பு தொடர்பு கொள்கிறேன் என கூறி அழைப்பை துண்டித்தார். அதன்பின் மீண்டும் மதியம் அவரை அழைத்தபோது, தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாக கூறியது.

-த.அருண் கார்த்திக்.

Leave a Reply

You must be logged in to post a comment.