திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பேரூராட்சியில் குட்டைகளைத் தூர் வாரி பராமரிக்காமல் குப்பைக் கிடங்காக பயன்படுத்தியதால், கடந்த சில நாட்களாக பெய்த மழை நீரை தேக்க முடியாமல் சாக்கடை நீராக மாறி வீணானது. ஊத்துக்குளி பேரூராட்சி 7ஆவது வார்டு சென்னிமலை சாலையில் வாரிக் குட்டை மற்றும் ஓட்டைகுளம் ஆகிய இரு நீர்நிலைகள் இருக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் இல்லாத நிலையில் தனி அலுவலர் கட்டுப்பாட்டில் பேரூராட்சி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பேரூராட்சியின் பல பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை வாரிக்குட்டையில் கொட்டி வைத்தனர். இதை ஆட்சேபித்து, வாரிக்குட்டை, ஓட்டைக்குளம் இரண்டு நீர் நிலைகளையும் தூர்வாரி சுத்தப்படுத்தி வைத்தால் மழைக் காலத்தில் மழைநீரை சேகரித்து வைக்கலாம். அது நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பெருக்குவதுடன், சுற்று வட்டார பகுதிகளுக்கும் பயனளிக்கும்.

எனவே , இங்கு குப்பைகள் கொட்டுவதைக் கைவிட வேண்டும், கொட்டப்பட்டக் குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரூராட்சி நிர்வாகத்தில் பல முறை மனு அளிக்கப்பட்டது. எனினும் ,பேரூராட்சி நிர்வாகம் இதைக் கண்டு கொள்ளவில்லை, எவ்வித சீரமைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் குடிநீர் பிரச்சனையும் இந்த வட்டாரத்தில் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் , கடந்த சில தினங்களாக ஊத்துக்குளி வட்டாரத்தில் கனமழை பெய்தது. இந்த மழைநீர் இயல்பாக வாரிக்குட்டைக்கும், ஓட்டைக் குளத்துக்கும் சென்று தேங்கியது. ஆனால் வழக்கமாக தூய்மையான மழைநீர் தேங்கி சுகாதாரமாக காட்சியளிக்கும் இந்த இரு நீர் நிலைகளும் ,தற்போது குப்பை மலைகளுக்குள் தேங்கி சாக்கடைக் கழிவுநீராக மாறி காட்சியளிப்பது இப்பகுதி மக்களுக்கும், சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களுக்கும் பெரும் வேதனை அளிப்பதாக உள்ளது.

ஏற்கெனவே ,மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பல முறை மனு அளித்தபோதே அக்கறையுடன் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அவல நிலையைத் தவிர்த்திருக்கலாம். அத்துடன் மக்களுக்கும் குடிநீர் தேவையை சமாளிக்க உதவியாக இருந்திருக்கும். ஆனால் நிர்வாக அலட்சியத்தின் காரணமாக தற்போது மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. மேலும்,இனியாவது விழித்துக் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் இந்த குப்பைகளை அகற்றி குட்டை, குளத்தைத் தூர்வாரினால் வரக்கூடிய நாட்களில் பெய்யக்கூடிய மழைநீரையாவது தேக்கி வைத்து மக்களுக்கு பயனளிக்கும்படி செய்ய முடியும். அதற்கு உரிய நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று ஊத்துக்குளி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் ஆர்.குமார் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.