நீலகிரி,
உதகை தாவிரவியல் பூங்கா அருகேயுள்ள சாலையோர விற்பனையாளர்கள் ண்டும் கடை வைத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் ஒப்புக்கொண்டதை அடுத்து போராட்டங்கள் கைவிடப்பட்டன.

தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் சுற்றுலாமையமாக நீலகிரி மாவட்டம் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, உதகையிலுள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான தாவரவியல் பூங்காவிற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதையொட்டி பூங்காவின் அருகில் அமைந்துள்ள சாலையோரம் நூற்றுக்கணக்கான சிறு விற்பனையாளர்கள் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்ட நிர்வாகமும், உதகை நகராட்சி நிர்வாகமும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதியன்று சாலையோர சிறு விற்பனையாளர்களை திடீரென அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கடைகளை நம்பி பிழைப்பு நடத்தி வந்த சிறு விற்பனையாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக, ஏப்ரல், மே மாதங்களில் தான் தாவரவியல் பூங்காவிற்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை புரிவார்கள். இதனால் தங்களது வியாபாரம் சூடுபிடிக்கும் என நம்பியிருந்த வியாபாரிகள் மத்தியில் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிஐடியு மாவட்ட செயலாளர் ஆல்தெரை தலைமையில் சிறு விற்பனையாளர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து முறையிட்டனர். மேலும், நகராட்சி அலுவலகத்தை சாலையோர சிறு வியாபாரிகள் முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் எவ்வித உடன்பாட்டிற்கும் வரவில்லை.

இதைத்தொடர்ந்து மே 3 ஆம்தேதியன்று சிஐடியு சார்பில் தாவரவியல் பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சங்க நிர்வாகிகளுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் கடை வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது. இதனால் போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து, புதனன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் நன்றி அறிவிப்பு கூட்டமாக நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் ஜே.ஆல்தெரை தலைமை தாங்கினார். இதில் சிறு விற்பனையாளர்கள் சங்க தலைவர் ராஜன், போக்குவரத்து ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் ராமன், சந்திரன் மற்றும் சிறு விற்பனையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: