புதுதில்லி:
மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு எழுதும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் சிபிஎஸ்இ ஒதுக்கிய மையங்களில்தான் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மே 6 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மாணவர்களுக்கு கேரள மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வேறு மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கிய சிபிஎஸ்இயின் அறிவிப்பை ரத்து செய்தனர். ஆனால், உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டுக்குச் சென்ற சிபிஎஸ்இ, தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க தற்போது அவகாசம் இல்லை என தெரிவித்தது.

இதை ஏற்று, நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே மையங்களை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. சிபிஎஸ்இ ஒதுக்கிய தேர்வு மையங்களில்தான் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave A Reply

%d bloggers like this: