மதுரை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கில் வரைவு நகல் அறிக்கையை தாக்கல் செய்ய முடியவில்லை என மத்திய அரசு கூறியிருப்பது ஏற்புடையதாக இல்லை. காவிரி விஷயத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக்கூட்டம் புதன், வியாழன் ஆகிய இருதினங்கள் மதுரையில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது குறித்து வியாழனன்று செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கில் வரைவு நகல் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. அதற்கு மாறாக கால அவகாசம் கேட்டுள்ளது. இதற்கு அவர்கள் கூறியுள்ள காரணம் மிகவும் மோசமானது. அதாவது, பிரதமரும் மத்திய அமைச்சர்களும் கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் வரைவு நகல் அறிக்கைக்கு ஒப்புதல் வாங்க முடியவில்லை எனக்கூறப்பட்டுள்ளது. காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. இது உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகும். காவிரி உரிமைக்காக மக்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு நடைபெற்றுவரும் நிலையில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு நான்கு டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிடவேண்டுமெனக் கூறியுள்ளது. மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கிற்கும் நான்கு டிஎம்சி தண்ணீர் திறந்துவிடுவதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது.

வழக்கம் போல் தண்ணீர்
வழக்கம் போல் சூன் 12-ஆம் தேதி மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும். கர்நாடக அரசு தண்ணீர் தருவதை தொடர்ந்து மறுத்து வருகிறது. மத்திய அரசு கர்நாடக அரசை நிர்ப்பந்தித்து காவிரியில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை திறந்துவிட வற்புறுத்த வேண்டும்.

நிர்மலாதேவி விவகாரம்
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தமிழக ஆளுநர் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை அமைத்துள்ளார். சிபிசிஐடி காவல்துறையினரும் வழக்கை விசாரித்துவருகின்றனர். அந்த விசாரணை இரண்டு பேராசிரியர்களைத் தாண்டியும் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டியும் செல்ல மறுக்கிறது. நிர்மலா தேவி விவகாரத்தில் தொடர்புடைய அத்துனை ‘கருப்பு ஆடுகளை’யும் கைது செய்து கூண்டிலேற்ற வேண்டும்.

அதற்கு சிபிசிஐடி விசாரணை போதுமானதல்ல. பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும். நிர்மலா தேவி விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி மே 10-ஆம் தேதி பல்கலைக்கழகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு- கழுத்தறுப்பு
நீட் தேர்வு பிரச்சனையில் சிபிஎஸ்இ நம்பவைத்து கழுத்தறுத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு எர்ணாகுளத்திற்கோ, இராஜஸ்தானிற்கோ செல்ல வேண்டிய நிலையை சிபிஎஸ்இ உருவாக்கியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் எம்பிபிஎஸ்-ல் சேரக்கூடாது என நினைக்கிறது போலும். இது தொடர்பான வழக்கில் சிபிஎஸ்இ கூறியிருக்கும் பதில் ஏற்புடையதாக இல்லை. அதாவது, கடைசி நேரத்தில் தேர்வு மையங்களை ஏற்படுத்த முடியாது. தேர்வு மையங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே பழைய நிலையே தொடரும் என சிபிஎஸ்இ கூறியுள்ளது நியாயமற்றது, பொருத்தமற்றது. தமிழக மாணவர்கள் தமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு
எஸ்.சி., எஸ்.டி., பழங்குடியின மக்களுக்குச் சாதகமான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யுமளவிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே போல் வரதட்சணை கொடுமைக்கு எதிரான வழக்கில் யாரையும் உடனடியாகக் கைது செய்யக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி தலித் மற்றும் ஜனநாயக அமைப்புகளை ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவோம். இந்தச் சட்டத்தை மாற்றி எழுத வேண்டும்.

கல்விக் கட்டணக் கொள்ளை
கல்விக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க நீதியரசர் சிங்காரவேலு தலைமையிலான குழு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தையே இன்னும் மாற்றியமைக்காமல் உள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் போடப்பட்ட நீதியரசர் டி.வி.மாசிலாமணி குழு இன்று வரை மூன்றில் ஒரு பங்கு தனியார் கல்வி நிலையங்களுக்கே கட்டண நிர்ணயம் செய்துள்ளது. இந்த நிலையில் கல்வி நிறுவனங்கள் தங்கள் இஷ்டப்படி கல்விக் கட்டணங்களை வசூலித்து வருகின்றன. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரயில்வே பள்ளிகளை மூடுவதா?
மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள ரயில்வே பள்ளிகளை மூட ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மற்றொருபுறத்தில் பாதுகாப்பில்லாத பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்தால் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளே இருக்காது. பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்த அரசு முயற்சிக்கிறது. ஏழை-எளிய மாணவர்களின் கல்வியைப் பாதுகாக்க அரசுப் பள்ளிகளும், ரயில்வே பள்ளிகளும் தொடர்ந்து செயல்பட மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாடு
மதுரை மாநகர் உட்பட தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவே மாட்டார்கள் போலிருக்கிறது. தேர்தல் நடத்தாததால் பராமரிப்புப் பணி, கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகளும் போதுமானதாக இல்லை. உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளாட்சி பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.

கூட்டுறவுத் தேர்தல்-அராஜகம்
தமிழகத்தில் கூட்டுறவுத் தேர்தல் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. போட்டியிடும் வேட்பாளர் கையெழுத்து சரியில்லை என்று கூறி மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஒருவர் வழக்கம் போல் இடுகிற கையெழுத்தை மற்றொருவர் எப்படி சரியில்லை எனக் கூற முடியும். கூட்டுறவுத் தேர்தலில் அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். இதனால் அவர்கள் தேர்தல் பணிகளுக்கு செல்ல அஞ்சுகின்றனர். கூட்டுறவுத் தேர்தல் அராஜகமான முறையில் மோசடியாக நடைபெறுகிறது.இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

பேட்டியின் போது மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.