===ஐவி.நாகராஜன்===
பட்டியல் இனத்தவர் பழங்குடிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்குகள் தொடரப்படுவதற்கு முன்னால் சில நடைமுறைப் பாதுகாப்பு ஏற்பாடுகளை விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். புகார் வருவதனாலேயே ஒருவரைக் கைதுசெய்வது கூடாது. காவல் அதிகாரி பூர்வாங்கமாக அதைப் பற்றி விசாரித்து புகாரின் தன்மை குறித்து உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துவரும் நிலையில், இந்த தீர்ப்பு சில கேள்விகளை எழுப்புகிறது.

அரசு ஊழியர்கள் மீது இந்தப் புகார்கள் கூறப்படுமானால், அவர்களுடைய மேலதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக அனுமதி அளிக்காதவரையில் கைதுசெய்யக்கூடாது. புகாருக்கு உள்ளானவர் தனியான குடிமக்கள் என்றால் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி கைதுசெய்வதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்கிறது உச்சநீதிமன்றம்.

தனிப்பட்ட பகைமையை தீர்த்துக்கொள்ளவும், எதிராளிகளை அலைக்கழிக்கவும்தான் பட்டியல் இனத்தவர் பழங்குடிகள் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989 அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்ற கணிப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. தவறாக பயன்படுத்தப்பார்க்கிறார்கள் என்பதற்காக ஒரு சட்டத்தை திருத்தவோ, ரத்து செய்யவோ வேண்டியதில்லை என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருப்பதை அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

இச்சட்டத்தின் விதிகளை மீறியவர்களுக்கு முன் ஜாமீன் தரக்கூடாது என்று சட்டத்தின் 18ஆவது பிரிவு கூறுகிறது. இந்த உரிமை மறுப்பு வழக்குக்கு உள்ளான அனைவருக்குமானது அல்ல. குற்றம்சாட்டப்பட்டவர் மீது முதல் நோக்கில் வழக்கு எதுவும் இல்லை என்றால் அவருக்கு முன் ஜாமீன் வழங்கலாம் என்கிறது அமர்வு. உண்மையில், இந்த சட்டத்தின் கீழ் புகார் செய்யப்பட்டால் அவை உடனே விசாரணைக்கு ஏற்கப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டு தீர்ப்புகள் வெளிவருவது மிகமிகக் குறைவு. வழக்குகள் பற்றிய தரவுகளை ஆராய்ந்தாலே இது தெரியவரும்.

இந்த சட்டம் 2015-ல் மேலும் திருத்தப்பட்டு கடுமையாக்கப்பட்டது. புதிய வகையான பாரபட்சங்களையும் தாக்குதல் வழிமுறைகளையும் கருத்தில்கொண்டே இப்படிச் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்வது சரியென்றாலும், இப்படிப்பட்ட வழக்குகளில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகள் குறித்து சமூகமும் சட்டமியற்றும் மக்கள் பிரதிநிதிகளும் கவலைப்படவேண்டும்.

ஒவ்வொரு புகாரும் அக்கறையுடன் பதிவுசெய்யப்பட்டு, விரைவாக விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வெளிவந்துவிடும் என்றால், சட்டத்தைப் பற்றியோ, இதர நிர்வாக நடைமுறைகள் குறித்தோ நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நம்முடைய சமூகம் லட்சிய சமூகமாக இல்லை. எனவே சமுதாயத்தின் நலிவுற்ற பிரிவு மக்களைக் காப்பாற்றுவதற்காக இயற்றப்பட்ட சட்டங்கள் எந்தக் காரணத்திற்காகவும் வலுவிழக்கப்படச் செய்யக்கூடாது. இந்த கவலை சமூகத்துக்கும் நீதிமன்றங்களுக்கும் கூட இருக்க வேண்டும்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பொறுத்தவரையில் 2015ஆம் ஆண்டு 1822 வழக்குகளும், 2016ஆம் ஆண்டு 1476, 2017-ஆம் ஆண்டு 1381, இந்தாண்டு (2018) 242 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இதேபோல் கொலை வழக்குகளை பொறுத்தவரையில் 2015ஆம் ஆண்டு 51 வழக்குகளும், 2016ஆம் ஆண்டு 53, 2017-ஆம் ஆண்டு 52, இந்தாண்டு (2018) 9 வழக்குகள் என பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் 90 சதவிகிதம் பொய்யான தகவலால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது. மத்திய அரசு இதனை ஏற்கிறதா? அல்லது என்ன கருதுகிறது? என்பதை விளக்க வேண்டும்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பல மாநிலங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் பல பேர் உயிரிழந்திருப்பது வேதனை தரும் நிகழ்வாகும். கேரள மாநிலத்தில் இந்த வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து முழு அடைப்பு நடைபெற்றதில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. அதேபோல் வட மாநிலங்களில் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதும் 11பேர் உயிரிழந்ததும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்புக்கு எதிர்வினை இவ்வளவு வலுவாக வரும் என்று எதிர்பார்க்காத மத்திய அரசும், மாநில அரசுகளும் தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு நடத்திய போராட்டங்களை சமாளிக்க முடியாமல் திணறின. தனது அணுகுமுறை காரணமாகத்தான் உச்சநீதிமன்றம் இப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கியது என்ற எண்ணம் நீங்க வேண்டும் என்பதற்காக தீர்ப்பின் மறுபரிசீலனை கோரும் மனுவை தாக்கல் செய்திருக்கிறது மத்திய அரசு.

இந்த தீர்ப்பின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் உச்சநீதிமன்றம் உணர்த்திய மறைமுக தகவல்தான் அவர்களை இந்தளவுக்கு கொதிப்படைய வைத்திருக்கிறது. சாதியின் பெயரால் இழிவை சந்திக்கும் மக்களுடைய இன்னல்களை புரிந்தும் புரியாததை போல அவர்களால் புகாருக்கு உள்ளாகிறவர்கள்தான் அப்பாவிகள் என்பதை போல தீர்ப்பு இருப்பதாகவே பலரும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இதுவே அவர்களுடைய கோபத்துக்கும் எதிர்வினைகளுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதற்கு முன்னால் அரசு ஊழியராக இருந்தால் அத்துறை தலைவரின் ஒப்புதலையும், சாதாரண மக்களாக இருந்தால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் ஒப்புதலையும் பெறவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இந்த உத்தரவானது நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்திற்கு மேலாக நீதித்துறை இயற்றும் சட்டமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் சமீபத்திய கோபம் முழுவதும் இந்த தீர்ப்பினால் மட்டுமே உருவானதா என்பது ஆராயப்படவேண்டும்.

சமீப காலமாகவே சமூக அரசியல் சூழல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக மாறிவருகிறது. சகிப்புத்தன்மை அற்றவர்கள் பல்வேறு விதங்களிலும் அவர்களுக்கு எதிராக தாக்குதல்களை தொடுக்கின்றனர். அரசின் நிர்வாக துறையும், நீதித்துறையும் அடித்தட்டு மக்களிடம் பரிவோடு செயல்படுவதில்லை. இந்தச் சூழலில் இப்படிப்பட்ட தீர்ப்பு அவர்களுடைய அச்சத்தையும் ஆற்றாமையையும் மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் இந்த தீர்ப்பு தொடர்பான மறு விசாரணையை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது உச்சநீதிமன்ற அமர்வு, இருப்பினும் இப்போது தேவைப்படுவதெல்லாம் அமைதியும், சமரசமும்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை; அதே நேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு அப்பாவிகளுக்கு சாதகமானதாக இருக்க வேண்டுமே தவிர மேலும் அவர்களை பாதாளத்தில் தள்ளுவதாக அமைந்துவிடக்கூடாது; சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் செயலையோ, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மறுக்கும் அணுகுமுறையையோ மேற்கொள்ளவில்லை என்றும் கூறியிருக்கிறது.

சட்டத்தின் பெயரால் அப்பாவிகள் அலைக்கழிக்கப்படாமல் காப்பாற்றப்படுவதும் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையும், கண்ணியத்தையும் காப்பாற்றுவது என்பது இந்த நேரத்தின் அவசிய அவசரமாகும். ஒன்றுக்காக இன்னொன்றை விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை. கடந்த கால வரலாற்றை புரட்டிப்பார்த்தால் தொடர்ந்து அதிகம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது ஒடுக்கப்பட்ட மக்கள்தான் என்பது தெரியவரும். ஒடுக்கப்பட்டவர்களின் கோபத்தையும், அதிருப்தியையும் கணக்கில் கொண்டு இந்த வழக்கை உச்சநீதிமன்றம் மீண்டும் தீர விசாரித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும். அதற்கேற்ற முறையில் அமைதியான பதற்றமற்ற அரசியல் சூழலை உருவாக்க மத்திய அரசு முன் வர வேண்டும். இதுவே இப்போதைய தேவை.

Leave a Reply

You must be logged in to post a comment.