சென்னை:
பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு மாற்றக் கோரியது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக புரட்சிகர மாணவர்கள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் தாக்கல் செய்த மனுவில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரியின் உதவி பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளை தவறான முறையில் வழிநடத்தியது தொடர்பாக அருப்புக்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, நிர்மலா தேவியை கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் மிகப்பெரிய, செல்வாக்குமிக்க நபர்களின் பெயர்கள் எல்லாம் அடிபட்டது.

இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த ஜெயந்த்முரளி திடீரென மாற்றப்பட்டார். அந்த பதவிக்கு கூடுதல் டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டுள்ளார். நிர்மலாதேவி வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிரிவில் உள்ள உயர் அதிகாரி மாற்றப்பட்டது, பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் உயர் மட்ட விசாரணைக் குழுவை ஆளுநர் நியமித்துள்ளார். அவ்வாறு விசாரணைக் குழுவை அமைக்க ஆளுநருக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை.

ஒரு குற்றச்சம்பவத்துக்கு பல விதமான விசாரணைகள் நடத்தப்பட்டால், அது சரியாக இருக்காது. எனவே, டி.ஐ.ஜி. பதவிக்கு குறையாத, குறிப்பாக பெண் காவல் அதிகாரி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும். இந்த சிறப்பு புலனாய்வு குழுவிடம் விசாரணையை ஒப்படைக்க வேண்டும். இந்த குழுவின் விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு வியாழனன்று ( மே 3 ) வி.பாரதிதாசன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது இது தொடர்பாக தமிழக அரசு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் , நிர்மலா தேவி உள்ளிட்டோர் வரும் 22 ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். குற்றம்சாட்டப்பட்டவரின் ஒப்புதல் வாக்குமூலங்கள் ஊடகங்களில் எப்படி வெளி வருகின்றது. ஏற்கனவே உயர்நீதிமன்றம் , உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் இது போன்ற தகவல்கள் வெளியாகின்றன. பத்திரிக்கை சுதந்திரத்திற்கும் எல்லை உண்டு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.