திருப்பூர்:
திருப்பூர் 15 வேலம்பாளையத்தை சேர்ந்த பாலசந்தர். அரசு பள்ளியில் பயின்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தமிழ் வழியில் படித்ததே எனது வெற்றிக்கு காரணம் என்று கூறினார்.

திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசந்தர் (27). இவரது தந்தை சீனிவாசன் பிரிண்டிங் தொழில் நடந்தி வருகிறார். பாலசந்தர் கடந்த 2013 ஆம் ஆண்டு பி.இ படித்து முடித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்தியா முழுவதும் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று இந்திய அளவில் 123 இடமும் தமிழக அளவில் 5ஆவது இடமும் பெற்றுள்ளார்.

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பாலசந்தர் தீக்கதிர் செய்தியாளரிடம் கூறுகையில்;
நான் 1ஆம் வகுப்பு முதல் 12 வரை 15 வேலம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் தான் படித்தேன். நான் தமிழ் வழியில் படித்தது எனது தேர்வு முறைக்கு மிகவும் உதவியாக இருந்தது. தேர்வுகளில் விருப்பப்பாடத்தை விருப்பமான மொழிகளிள் எழுதலாம். நான் என்னுடைய விருப்பப்பாடமாக தமிழ் இலக்கியத்தை தேர்வு செய்தேன். அதில் தான் எனக்கு முழுமையாக 500 மதிப்பெண் எடுக்க முடிந்தது. தமிழ் வழி கல்வியில் படித்ததால் தான் எனக்கு இந்த தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது.

எனக்கு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தில் பயிற்சி வகுப்பிற்கு அழைப்பு வந்திருக்கின்றது. அதற்கு சென்று பணிக்கு செல்லும் பொழுது எனது முக்கியமான பணிகளாக என் முன் இருப்பது ஏழை எளிய மாணவர்களுக்கு கட்டாயமான சமமான கல்வி வழங்க நடவடிக்கை எடுப்பது. அனைவருக்கும் சமமான இலவசமான கல்வி கிடைத்தாலே குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிக்கலாம். ஆகவே எனது பணியின் முக்கியமாக இதை கருதுகிறேன்.

இரண்டாவதாக பெண் கல்வி மற்றும் பெண்கள் மேம்பாடுகள் சம்பந்தமாக சில முக்கியமான விசயங்களை கையாள்வது. மேலும் அரசின் ஏராளமான நல திட்டங்கள் மக்களை சென்றடையாமல் இருக்கின்றது. அதனை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்வதற்கு தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். மேலும் நான் அரசு பள்ளியில் படித்த மாணவன் என்பதால் அனைத்து விதமான கஷ்டங்களை அறிந்து வளர்ந்ததால் அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயமான முறையில் நடந்து கொள்வேன் என்று கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.