தஞ்சாவூர்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. அத்துடன் டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல்கேஸ் உள்ளிட்டவற்றை எடுப்பதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது. இதனால் எதிர்காலத்தில் காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்க துடிக்கும் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசையும், இதற்கு துணை போகும் மாநில அரசையும் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சை ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் வியாழக்கிழமை நடந்தது.

போராட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் வி.சுப்ரமணியன், மாநிலத் துணைத்தலைவர் கே.முகமது அலி, மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், நிர்வாகிகள் சாமி நடராஜன், எஸ்.பொன்னுசாமி, கடலூர் மாவட்டத் தலைவர், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஏ.ராமையன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், தஞ்சை நிர்வாகிகள் என்.வி.கண்ணன், எம்.பழனிய்யா, ஏ.கோவிந்தசாமி, காதர் உசேன், கோவிந்தராஜ், கே.முணியாண்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில், தமிழக அரசு, மத்திய பாஜக அரசுக்கு சாதகமாக செயல்படுவதை கைவிட்டு தமிழக நலனை பாதுகாக்க வேண்டும். உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காது. கடந்த 6 ஆண்டு சாகுபடி நடைபெற இல்லை. இப்போதும் தண்ணீர் கிடைக்காவிடில் டெல்டா விவசாயிகள் இந்தாண்டும் பாதிக்கப்படுவர். குறுவை சாகுபடிக்கு உடனடியாக மத்திய, மாநில அரசுகள் காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.