===இ.எம் ஜோசப்===
இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி அளிக்கப்பட்டு விட்டது என பிரதமர் மோடி 28.04.2018 ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். 2015 ஆகஸ்ட் 15ஆம் நாளில் இன்னும் 1000 நாட்களுக்குள் இந்தியா முழுமைக்கும் மின்வசதி நிறைவு செய்யப்படும் என்று பிரதமர் மோடி வாக்களித்திருந்தார். 12 நாட்களுக்கு முன்னதாகவே – அதாவது 988 நாட்களுக்கு உள்ளாகவே – அந்த வாக்குறுதி அமலாக்கப்பட்டு விட்டது எனவும், இது பல இந்தியர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் எனவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருக்கிறார்.

“எல்லா கிராமங்களும் அல்ல. எனது கிராமத்திற்கு மின்வசதி வரும் என ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்ப்பேன். அது இவ்வாண்டும் வரவில்லை “ என உத்தரப்பிரதேச கிராமம் ஒன்றில் வசிக்கும் திலீப் குப்தா டுவிட்டரிலேயே உடனடியாக அதனை மறுத்திருக்கிறார் என்பது தனிக்கதை.

இந்தியா முழுவதுமுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பில் உள்ள 5,97,464 கிராமங்களில், 2014இல் மோடி பதவி ஏற்கும் போது 18,452 கிராமங்கள் மின் வசதி பெறாமலிருந்ததாகவும் இப்போது அவை அனைத்திற்கும் மின்வசதி அளிக்கப்பட்டு விட்டதாகவும் மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் தரவுகள் கூறுகின்றன.

உண்மை நிலைமை!
உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் 60 சதவீதத்துக்கு உட்பட்டே மின்வசதி உள்ளது. மொத்தம் உள்ள 30 மாநிலங்களில், 12 மாநிலங்களில் 80 சதவீதத்திற்கு உட்பட்டே மின்வசதி உள்ளது.

1947இல் நாடு சுதந்திரம் அடைந்தபோது மொத்தம் 1,500 கிராமங்களுக்கு மட்டுமே மின் வசதி இருந்தது. மின் இணைப்பு வேலை கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கிறது.
இப்போது ஐ.மு.கூ மற்றும் பா.ஜ.க.கூட்டணி அரசுகளின் மின் இணைப்பு நடவடிக்கைகளில் அண்மைக்கால ஒப்பீடுகளைப் பார்க்கலாம்! 2005 லிருந்து 2014 வரையிலான ஐ.மு.கூ அரசாங்கம், 2 கோடி (20 மில்லியன்) வீடுகளுக்கு மின் வசதி அளித்தது. அதில், 1.9 கோடி வீடுகளுக்கு இலவச மின் வசதி என்பதும் குறிப்பிடத்தக்கது. 2015ல் மோடியின் அறிவிப்பு வரும்போது மின்வசதி இல்லாத கிராமங்களின் எண்ணிக்கை 18,452.

சராசரியாக ஆண்டொன்றிற்கு, ஐ.மு.கூ அரசாங்கம் 12,030 கிராமங்களுக்கும், மோடியின் பா.ஜ.க அரசாங்கம் 4,842 கிராமங்களுக்கும் மின் இணைப்பு அளித்திருக்கின்றன.
மோடி அரசாங்கம் தூர தொலைவில் இருக்கும் எல்லைப்புற கிராமங்களுக்கு மின்வசதி அளித்தது, அதனால் இரு மடங்கு சிரமத்தை எதிர்கொண்டது என வைத்துக் கொண்டாலும் கூட, 2016 -17இல் பா.ஜ.க அரசு மின் வசதி அளித்தது 6,015 கிராமங்கள் மட்டுமே. 2013 -14இல் ஐ.மு.கூ அரசு அளித்தது இதை விட ஐந்து மடங்கு அதிகம்.

கேரளாவில்…
மாநிலம் என்ற அளவில், இதில் கேரள இ.ஜ.மு அரசு முன்னிலை வகிக்கிறது. சென்ற ஆண்டு மே மாதத்தில், கேரள மாநிலத்தில் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கும் பணி முடிவடைந்து விட்டது. அதே வேளையில், அடர் வனங்களில் குடியிருக்கும் 150 குடும்பங்கள் உள்ளிட்ட 1000 குடும்பங்களுக்கு மின் இணைப்பு தர இயலவில்லை என்ற தனது கவலையினையும், அக்கறையினையும் கேரள அரசு மனந்திறந்து கூறி இருக்கிறது.

மின்மயம் முழுமை ஆனது எப்படி?
சென்ற ஆண்டு உலக வங்கி மின்பற்றாக்குறை பற்றி தனது அறிக்கையில், உலகம் முழுவதும் நூறு கோடியே அறுபது லட்சம் மக்கள் ( 1.06 பில்லியன்) மின்வசதி இன்றி இருக்கின்றனர் எனவும், மின்பற்றாக்குறை நாடுகளில் இந்தியாவும், நைஜீரியாவும் மிக மோசமான நிலையில் முன்னணி வகிக்கின்றன எனவும், கூறியிருக்கிறது. அப்படியானால் சென்ற ஆண்டு உலக வங்கியின் அறிக்கையினை மோடி ஒரே ஆண்டில் அவ்வளவு எளிதாக பொய்யாக்கி விட்டாரா என்ற கேள்வி இயல்பாகவே எழும். அப்படி எனில் உண்மை தான் என்ன?
மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கணக்குப் படி ஒரு கிராமத்தில் 10 சதவீத வீடுகளுக்கும், பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகக் கட்டிடம், மருத்துவ சேவை மற்றும் சமுதாயக்கூடக் கட்டிடங்களுக்கும் மின்வசதி அளிக்கப்படும் எனில், அந்த கிராமம் 100 சதவீத மின்வசதி கொண்டது எனக் கணக்கிடப்படும்.

அவ்வகையில் அவர்களைப் பொறுத்த மட்டில் 100 சதவீதம் முடிந்து விட்டது. ஆனால், எதார்த்தத்தில், இன்று இந்தியாவில் மூன்று கோடியே பத்து லட்சம் (3.1 மில்லியன்) வீடுகளுக்கு மின்வசதி இல்லை என்பதே உண்மை.

ஜி.டி.பி உள்ளிட்ட அம்சங்களில், அடிப்படை இலக்கணங்களை மாற்றி, புள்ளி விவரங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பிரச்சாரம் செய்வதில் மோடி கை தேர்ந்தவர் என்பது நமக்கு தெரியும். மின் இணைப்பில் 10 சதவீதம் என்றாலே, 100 சதவீதம் என்றால், அதைப் பயன்படுத்தாமல் விடுவாரா?

ஒன்று வாங்கினால், ஒன்பது இலவசம். ஆகா! என்ன அருமையான ஆஃப்பர்!

Leave a Reply

You must be logged in to post a comment.