தீக்கதிர்

ஊட்டச்சத்து உணவுக்கு உங்கள் தேர்வு என்ன?

===என்.நாராயணன்===
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்பில் திங்கள் கிழமையன்று வெளியிட்டுள்ள ஒரு டுவிட்டர் பக்கத்தில், நாட்டு மக்கள் நலமுடன் வாழ என்னென்ன சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், அதில் நாட்டு மக்களில் பெரும்பாலோர் ஊட்டச்சத்துக்குறைவால் அவதிப்படுவது குறித்தோ, அதற்கு முட்டை மற்றும் இறைச்சி போன்ற உணவுப் பொருள்கள் அவசியம் என்பது குறித்தோ அது எதுவும் கூறவில்லை என்பதையும் பார்க்க முடிகிறது.

அமைச்சகம் இது தொடர்பாக இரு பெண் சித்திரங்களை பகிர்ந்திருக்கிறது. அதில் குண்டாக உள்ள ஒரு பெண்ணின் உடலுக்குள் ஆரோக்கியமற்ற உணவுப்பொருள்களான சிப்ஸ், குளிர்பானங்கள், இறைச்சி, முட்டைகள், வறுவல் உணவுப் பொருள்கள் போன்றவை இருப்பது போலவும், அடுத்ததாக ஒல்லியாக உள்ள ஒரு பெண்ணின் உடலுக்குள் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் இருப்பதுபோலவும் காட்டப்பட்டிருந்தன. மத்திய சுகாதார அமைச்சகம் சைவ உணவை மேம்படுத்த முனைகிறது என்றும், இறைச்சியை ஓர் ஆரோக்கியமற்ற உணவு என்று கூறுகிறது என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வருவதற்கு முன்னரேயே, இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட டுவிட்டர் தகவல் பின்னர் நீக்கப்பட்டுவிட்டது.
மத்திய சுகாதார அமைச்சகம், தெரிந்தோ அல்லது தெரியாமலோ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தின் மூலம், ஒரு செய்தியை மக்கள் மத்தியில் பரப்பியிருக்கிறது. அதாவது, சைவ உணவு உடல்நலத்திற்கு உகந்தது என்றும், இறைச்சி மற்றும் முட்டைகள் அப்படி அல்ல என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் அந்தச் செய்தியில் காணப்படும் பிரச்சனை என்ன?
உண்மையில் மனித உடலின் வளர்ச்சிக்கும் அதனைச் சரிசெய்வதற்கும் புரதச் சத்துக்கள் மிக மிக அவசியமாகும். புரதச்சத்து இன்மையால் ஊட்டச்சத்துக் குறைவாக உள்ளவர்கள்தான் நம் நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக அதிகமாக இருக்கிறார்கள். மனித உடலின் வளர்ச்சிக்கு புரதச் சத்து அத்தியாவசியத்தேவை என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை கூறுகிறது.

குறிப்பாக சிறுவர்கள் குறைந்த எடையுடன் காணப்படுவதற்கும், புரதச்சத்தின்மையே முக்கிய காரணமாகும். சமீபத்தில் வெளியிடப்பட்ட குடும்ப சுகாதார ஆய்வறிக்கையானது, நம் நாட்டில் 36 சதவீதக் குழந்தைகள் குறைந்த எடையுடன் காணப்படுகின்றனர் என்றும், 21 சதவீதத்தினர் தங்கள் வயதுக்குத் தேவையான எடையும், 38 சதவீதத்தினர் தங்கள் வயதுக்குத் தேவையான உயரமும் இன்றி காணப்படுகின்றார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. புரதச்சத்தின்மை இயல்பான உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், ஒருவரின் இயல்புவாழ்க்கையை நிரந்தரமாக முடக்கிவிடக்கூடிய நிலைக்கும் இட்டுச்சென்றுவிடும்.
நம் நாட்டில் புரதச்சத்தின்மை என்பது பெரியவர்களையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது.

2015ஆம்ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நுகர்வோர் ஆய்வு, நம் நாட்டில் உணவு உண்போரில் பத்தில் ஒன்பது பேர் புரதச்சத்து இல்லாத உணவையே உட்கொள்ளுகிறார்கள் என்று கண்டிருக்கிறது. நாட்டில் உள்ள கர்ப்பிணிப்பெண்கள் புரதச்சத்தின்மையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது அவர்களின் உடல்நலத்தை மட்டுமல்ல, அவர்களின் கருவில் வளரும் குழந்தையின் உடல்நலத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது.

புரதச்சத்து நிறைந்தவையாகக் கருதப்படும் உணவுப் பொருள்களில், பருப்பு வகைகள், அவரை வகைகள், பால், முட்டைகள், இறைச்சி மற்றும் மீன் முக்கியமானவைகளாகும். ஹைதராபாத், தேசிய ஊட்டச்சத்து நிலையம் (National Institute of Nutrition) வெளியிட்டுள்ள உட்கொள்ளும் உணவு தொடர்பான வழிகாட்டும் நெறிமுறைகள், விலங்குப் புரதங்கள் மிகவும் தரமானவை என்றும் ஏனெனில் அவை அனைத்து அத்தியாவசியமான அமினோ அமிலங்களையும் மிகச் சரியான விகிதக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன என்றும் அதே சமயத்தில் தாவரங்களில் அல்லது காய்கறிகளில் காணப்படும் புரதச்சத்துக்கள் அந்த அளவிற்குத் தரமானவை இல்லைஎன்றும், அவற்றில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் போதுமான அளவிற்கு இல்லை என்றும் கூறியிருக்கிறது.

இவ்வாறு சொல்வதன்மூலம் ஒருவருக்கு சைவ உணவு உட்கொள்ளுவதால் தேவையான அளவிற்கு புரதச்சத்துக்கள் கிடைக்காது என்று பொருள் அல்ல. மாறாக சைவ உணவு உட்கொள்பவர்கள் தங்களுக்குத் தேவையான புரதத்தைப் பெற வேண்டுமானால் அதற்கு ஏற்றவிதத்தில் தானியங்கள் (cereals) , சோளம் போன்ற தினைவகைத் தானியங்கள் (millets), மற்றும் பருப்பு வகைகள் (pulses) உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்குத் தேவையான அளவிற்கு அமினோ அமிலம் கிடைத்திடும்.

உண்மையில், முட்டைகள் மிகச்சிறந்த புரத உணவுப்பொருளாகும். மிக உயர்ந்த அளவிற்கு புரதச்சத்து கிடைக்கிறது.

எந்தெந்த உணவுப் பொருள்களில் புரதத்தின் உயிரியலுக்குரிய மதிப்பு எந்த அளவிற்குக் காணப்படுகிறது என்று கீழே தரப்பட்டிருக்கிறது.
உணவு                                                                        உயிரியலுக்குரிய மதிப்பு (biological value)
முட்டை                                                                                                  93.7
பால்                                                                                                          84.5
மீன்                                                                                                           76.0
மாட்டிறைச்சி                                                                                         74.3
சோயாபீன்ஸ்                                                                                         72.8
அரிசி (தீட்டப்பட்டது)                                                                            64.0
கோதுமை (முழுமையாக)                                                                  64.0
பருப்பு, மக்காச்சோளம்                                                                        60.0
பீன்ஸ் (உலர்ந்தது)                                                                                59.0

ஆதாரம்: உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO)

நம் நாட்டில் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வழி கிடைத்துவந்த புரதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்நிலையில், புரதச்சத்தின்மை நாட்டு மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிக் கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, இது தொடர்பாக, 2017ஆம் ஆண்டு தேசிய ஊட்டச்சத்து நிலையம் (National Institute of Nutrition) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை, கடந்த இருபது ஆண்டுகளில், அதாவது 1993க்கும் 2013க்கும் இடையில், பீன்ஸ் உணவுப்பொருளில் இருந்த புரதத்தின் அளவு 60 சதவீதம் குறைந்துவிட்டது என்றும், பருப்புப் பொருள்களில் 10 சதவீதம் குறைந்துவிட்டது என்றும், ஆட்டிறைச்சியில் 5 சதவீதம் குறைந்துவிட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

இவ்வாறு குறைந்திருப்பதற்கு தொடர் வேளாண் நடவடிக்கைகள், புவி வெப்பமயமாதல் மற்றும் மண்வளம் குறைந்திருத்தல் போன்றவை காரணங்களாக இருக்கக்கூடும் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களுக்கு புரதச்சத்து குறைவு காரணமாக ஊட்டச்சத்து குறைந்திருப்பதே இன்றைய எதார்த்த நிலையாகும். இந்த லட்சணத்தில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், மக்களுக்கு எளிதாகக் கிடைக்கக்கூடிய முட்டைகள் மற்றும் இறைச்சி போன்றவற்றை ஆரோக்கியமற்றவை என்று முத்திரை குத்தியிருப்பது மிக மோசமான ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: ஸ்குரோல்.இன்
தமிழில்: ச.வீரமணி