புதுதில்லி:
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 23 ஆயிரம் வங்கி மோசடிகள் நடந்திருப்பதும், இதில் சாதாரண மக்கள் சேமித்து வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 718 கோடி பணம் சூறையாடப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, மோடி அரசு கொண்டுவந்த பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமலாக்க காலத்தில்தான் மிக அதிகபட்சமாக ரூ. 30 ஆயிரம் கோடி பணம் வங்கிகளிலிருந்து சூறையாடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வங்கி மோசடிகள் தொடர்பாக, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ‘பிடிஐ’ செய்தி நிறுவனம் எழுப்பியிருந்த கேள்விக்கு ரிசர்வ் வங்கி தற்போது பதில் அளித்துள்ளது. அதில்தான் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.

“கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து வங்கிகளிலும் 23 ஆயிரத்து 866 மோசடி வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதில் 2017 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரையிலான காலத்தில் மட்டும் 5 ஆயிரத்து 152 வங்கி மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன; இதன் மதிப்பு ரூ. 28 ஆயிரத்து 459 கோடியாகும்; அத்துடன், கடந்த 5 ஆண்டுகளில் மோசடிகள் மூலம் கையாடல் செய்யப்பட்ட அதிகபட்சமாக தொகை இதுதான்” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதேபோல, கடந்த 2016-17 ஆம் ஆண்டில் 5 ஆயிரத்து 76 மோசடிகள் மூலம் ரூ. 23 ஆயிரத்து 933 கோடியும், 2015-16 ஆம் ஆண்டில் 4 ஆயிரத்து 693 மோசடிகள் மூலம் ரூ. 18 ஆயிரத்து 698 கோடியும், 2014-15-ஆம் ஆண்டில் 4 ஆயிரத்த 639 மோசடிகள் மூலம் ரூ. 19 ஆயிரத்து 455 கோடியும், 2013-14 ஆம் ஆண்டில் 4 ஆயிரத்து 306 மோசடிகள் மூலம் ரூ.10 ஆயிரத்து 170 கோடியும் மோசடி செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 1 லட்சத்து 718 கோடி ரூபாய் மக்கள் பணம் நாட்டின் பெருமுதலாளிகளால் ‘முறைப்படியாக’ களவாடப்பட்டுள்ளது.
மற்றொரு புறத்தில், நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளின் வாராக்கடன் மதிப்பும் ரூ. 8 லட்சத்து 40 ஆயிரத்து 958 கோடியாக உயர்ந்துள்ளது, குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தொழில்துறையினர், சேவைத்துறையினர், வேளாண் துறையினர் ஆகியோர் கடனை திருப்பிச் செலுத்தாததால், வாராக்கடன் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இதிலும் பெரும் பகுதியை, அம்பானி, அதானி வகையறாக்கள்தான் திருப்பிச் செலுத்தாமல் உள்ளனர்.

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ. 2 லட்சத்து ஆயிரத்து 560 கோடி வராக்கடன் நிலுவையில் உள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கிக்கு ரூ. 55 ஆயிரத்து 200 கோடியும், ஐடிபிஐ வங்கிக்கு ரூ. 44 ஆயிரத்து 542 கோடியும், பாங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ. 43 ஆயிரத்து 474 கோடியும், பாங்க் ஆப் பரோடாவுக்கு ரூ. 41 ஆயிரத்து 649 கோடியும் வராக்கடனாக உள்ளது. மேலும், கனரா வங்கிக்கு ரூ. 37 ஆயிரத்து 794 கோடி, ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ. 33 ஆயிரத்து 849 கோடி வராக்கடன் நிலுவையில் இருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: