===எஸ்.பி.ராஜேந்திரன் ===                                                                                                                                                  மேற்குவங்கத்தில் நடைபெறவுள்ள பஞ்சாயத்து தேர்தலில் அனைத்து இடங்களையும் போட்டியின்றி கைப்பற்றிவிட்டதாக மம்தா பானர்ஜி கூறுகிறார். தமிழகத்தில் சில ஏடுகளும் உண்மையை ஆராயாமல், மம்தா கூறியதையே வாந்தி எடுத்துள்ளனர். ஒரு படி மேலே போய், பஞ்சாயத்து தேர்தலில் மம்தாவை எதிர்த்து நிற்க மேற்குவங்க கம்யூனிஸ்ட்டுகளுக்கு திராணி இல்லாமல் போய்விட்டது என்று கூட எழுதியுள்ளன.எதிர்க்கட்சிகளே இல்லாமல் செய்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றும் நாட்களை மேற்குவங்கம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் வலதுசாரி பிற்போக்குவாத – மதவாத – இனவாத வெறிபிடித்த சக்திகள் எங்கெல்லாம் ஆட்சியதிகாரத்திற்கு வர முனைகின்றனவோ, அதற்கான சூழல் உருவாக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அவர்கள் முதலில் படுகொலை செய்வது ஜனநாயகத்தைத்தான். தேர்தலில் எதிர்த்து போட்டியிட யாரும் இல்லாமல் செய்வதே அவர்களது வேலை.

அதற்காக ஒன்று, எதிர்க்கட்சிகளிடம் அல்லது எதிர்க்கட்சிகளது பிரமுகர்கள், ஊழியர்களிடம் பேரம் பேசுவது; விலைக்கு வாங்குவது என இழிவான வேலையில் இறங்குவது; மற்றொன்று, உறுதியான – கொள்கைப்பிடிப்பு மிக்க – எவருமிடமும் விலைபோகாத கட்சிகளின் ஊழியர்களை கொடூரமான முறையில் தாக்குவது, படுகொலை செய்வது, அவர்களது குடும்பத்து பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது, வீடு மற்றும் சொத்துக்களை சூறையாடுவது; கொடூரமான ஆயுதங்களால் சம்பந்தப்பட்ட பகுதியையே கலவரப் பூமியாக்குவது; உறுதிமிக்க ஊழியர்களுக்கு எதிராக வரலாறு காணாத வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்துவிடுவது.இதில் இரண்டு பாணிகளையுமே பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அரங்கேற்றியிருக்கிறது. எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியா, எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றம் என்பதே மோடி – அமித்ஷா கும்பலின் தாரக மந்திரம்.

மேற்கண்ட பாணிகளில் இரண்டாவது வழிமுறையை தேர்வு செய்திருக்கிறது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ். மேற்குவங்கத்தில் தன்னை உறுதியோடு எதிர்த்து நிற்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள்- எதற்கும் அஞ்சாதவர்கள் – யாரிடமும் விலை போகாதவர்கள் என்பது மம்தாவுக்கு தெரியும். எனவேதான், இதுவரை இல்லாத அளவிற்கு இந்த பஞ்சாயத்து தேர்தலில் வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார். நேர்மையான முறையில் ஜனநாயகப்பூர்வமாக தேர்தலை எதிர்கொள்ள திராணியற்ற மம்தா பானர்ஜி, மேற்குவங்கம் முழுவதும் மக்கள் சமூகத்தை இந்த தேர்தலில் தனது கொடூரமான குண்டர் படைகளை ஏவி, கிட்டத்தட்ட பயங்கரவாத பூமிபோல மாற்றியிருக்கிறார் என்பதே உண்மை.மே 14 அன்று அங்கு ஒரே கட்டமாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் என இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதலில் பல கட்டங்களாக, மே முதல்வாரம் துவங்கி பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாநிலம் முழுவதும் வேட்புமனு தாக்கலின் போதே எதிர்க்கட்சிகள் மீது, குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணியின் வேட்பாளர்கள், தலைவர்கள் மீது திரிணாமுல் குண்டர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரும் வன்முறையை நடத்தினர்.

கண்ணில் பட்டவர்களையெல்லாம் கொடூரமாக தாக்கினர். இவர்களது தாக்குதலில் 9 முறை எம்.பி.யாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்புமிக்க தலைவர் பாசுதேவ் ஆச்சார்யாவும் தப்பவில்லை. சின்னஞ்சிறிய கிராமங்களைச் சேர்ந்த செங்கொடியேந்திய எளிய ஆண், பெண் ஊழியர்களும் தப்பவில்லை. அனைத்து கிராமப் பஞ்சாயத்துக்களிலும் வார்டு வார்டாக மார்க்சிஸ்ட்டுகளின் ரத்தம் சிந்தியது.மேற்குவங்கத்தின் கிராமப்புறங்களில் இத்தகைய பயங்கரம் அரங்கேறி கொண்டிருந்தபோது, கொல்கத்தாவில் இருந்து வெளியாகும் பல தேசிய நாளிதழ்கள் அதை கண்டுகொள்ளவில்லை. 24 மணி நேர செய்தி சேனல்களுக்கு இதுவரை செய்தியாகக் கூட படவில்லை. கடந்த ஒரு மாதக்காலமாக அரங்கேறி கொண்டிருக்கும் திரிணாமுல்லின் அட்டூழியங்கள் கடந்த வாரம் கொல்கத்தா மாநகரிலும் அரங்கேறியது. கொல்கத்தாவின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அலிப்பூர் மாவட்டத்தின் தலைமை அலுவலகம். அங்கு மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளுக்காக வேட்புமனு தாக்கல் செய்ய வந்த, இடது முன்னணி வேட்பாளர்கள் மட்டுமல்ல, காங்கிரஸ் வேட்பாளர்கள், ஏன் பாஜக வேட்பாளர்களும் கூட திரிணாமுல் குண்டர்களால் விரட்டியடிக்கப்பட்டார்கள். துப்பாக்கியேந்திய திரிணாமுல் குண்டர்களை அங்கிருந்த அரசு ஊழியர்களால் பகைத்துக் கொள்ள முடியவில்லை.

வீதிவீதியாக அவர்கள் துப்பாக்கிகளோடு வலம் வந்தார்கள். எதிர்த்து கேட்டவர்களை வாளால் வெட்டினார்கள். போலீஸ்காரர்கள் மவுனச் சாட்சிகளாக நின்றார்கள். ஒரு நபர் கூட எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்யக் கூடாது என்று ஜனநாயகத்திற்கு குண்டர்கள் உத்தரவு போட்டார்கள். அன்றைய தினம் மாலை கொல்கத்தாவில் பேட்டியளித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தின் நூறு சத பஞ்சாயத்து இடங்களிலும் எதிர்ப்பே இல்லாமல் வெற்றி பெறுவோம் என்று கொக்கரித்தார். சில நாட்கள் கழித்து இப்போது, அனைத்து இடங்களிலும் வென்றுவிட்டோம் என்று கூறியிருக்கிறார். இதைத்தான், மேற்குவங்கத்தின் கம்யூனிஸ்ட்டுகளுக்கு திராணி இல்லாமல் போய்விட்டது என்று கைக்கூலி ஊடகங்கள் மகிழ்ச்சியுடன் எழுதியிருக்கின்றன.ஆனால் மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள் மட்டும்தான் திராணியோடு மம்தாவையும் எதிர்த்து நிற்கிறார்கள். பாஜகவையும் எதிர்த்து நிற்கிறார்கள். அதை தேர்தல் ஆணையமே வெளியிட்டுள்ள விபரங்கள் உறுதி செய்கின்றன. திரிணாமுல் குண்டர்களின் அராஜகங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் விமர்சித்துள்ள தேர்தல் ஆணையர், வேறுவழியின்றி பல கட்டத் தேர்தலை ரத்து செய்துவிட்டு ஒரே கட்டமாக மே 14 அன்று வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார். வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, கிராமப் பஞ்சாயத்துக்களில் மொத்தமுள்ள 48,650 வார்டுகளில் – இத்தனை வன்முறையை பிரயோகித்துக் கூட 34.6 சதவீதம் இடங்களில் மட்டும்தான் எதிர்க்கட்சி வேட்பாளர்களை போட்டியிடுவதிலிருந்தே தடுக்க முடிந்திருக்கிறது. அதாவது 16,814 வார்டுகளை போட்டியின்றி திரிணாமுல் கைப்பற்றியிருக்கிறது.

ஒன்றிய பஞ்சாயத்துக்களில் மொத்தமுள்ள 9,217 வார்டுகளில் 33.2 சதவீதம் இடங்கள் – அதாவது 3059 இடங்களை திரிணாமுல் போட்டியின்றி கைப்பற்றியுள்ளது.
மாவட்டப் பஞ்சாயத்துக்களில் மொத்தமுள்ள 825 வார்டுகளில் 24.6 சதவீதம் இடங்கள் – அதாவது 203 வார்டுகளை திரிணாமுல் போட்டியின்றி கைப்பற்றியுள்ளது.
எனவே, ஒட்டுமொத்த பஞ்சாத்து அமைப்புகளையும் போட்டியே இல்லாமல் கைப்பற்றி சாதனை படைத்துவிட்டார் மம்தா பானர்ஜி என்ற வெற்றுப் புகழரைகளை தமிழக ஏடுகள் உள்ளிட்ட ஊடகங்கள் ஒதுக்கி வைக்கட்டும்.இவற்றில் பெரும்பாலான இடங்களில் வன்முறையை எதிர் கொண்டு, துப்பாக்கிகளை எதிர்கொண்டு, திரிணாமுல்லின் ரத்தவெறியை எதிர்கொண்டு களத்தில் நிற்பது கம்யூனிஸ்ட்டுகளே.

பல இடங்களில் திரிணாமுல் குண்டர்களிடம் பாஜகவினர் சமரசம் செய்து கொண்டு சரணடைந்துவிட்டார்கள். பல இடங்களில் எதிர்க்க முனைந்து காங்கிரஸ்காரர்கள் வீழ்ந்துவிட்டார்கள். ஆனால் ரத்தம் சிந்தியும் செங்கொடியை துவளவிடாமல், மக்களை திரட்டி, குண்டர்களை எதிர்த்து நின்று வேட்புமனுக்களை தாக்கல் செய்து போட்டியில் நிற்பது இடது முன்னணி மட்டுமே.“மொத்தத்தில் 80 சதவீத மாவட்ட பஞ்சாயத்து உள்பட மூன்றில் இரண்டு பங்கு பஞ்சாயத்து இடங்களில் இடது முன்னணி திரிணாமுல் கட்சிக்கு போட்டியாக நிற்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் அவர்கள் வன்முறையை ஏவினாலும், தேர்தல் விதிமுறைகள் முற்றாக மீறப்பட்ட போதிலும், நீதிமன்ற தீர்ப்புகள் காலிப் போட்டு நசுக்கப்பட்ட போதிலும், அரசு நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் திரிணாமுல் குண்டர்களிடம் விலைபோன நிலையிலும் நாங்கள் எதிர்த்து நிற்கிறோம்” என்று முழங்குகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் டாக்டர் சூரியகாந்த மிஸ்ரா.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, ஒரு பஞ்சாயத்து தேர்தலில் இத்தனை பெரிய வன்முறை வெறியாட்டம் அரங்கேற்றப்பட்டிருப்பது இப்போதுதான் என ஆச்சர்யமும், கொதிப்பும் பொங்க அவர் குறிப்பிடுகிறார். திரிணாமுல், பாஜகவை தோற்கடிக்கும் என்றோ, பாஜக திரிணாமுல்லை தோற்கடிக்கும் என்றோ கருதிவந்த மக்கள் கூட, இந்த இரண்டுமே தற்கொலைக்குச் சமமானது என்று இப்போது உணர்ந்துவிட்டார்கள் எனக் குறிப்பிடும் சூரிய காந்த மிஸ்ரா, இரண்டு கட்சிகளுமே போட்டிப்போட்டு ஜனநாயப் படுகொலையை அரங்கேற்றுகின்றனர் என சாடுகிறார்.மே 14 அன்று தேர்தல் நடக்கப் போகிறது. அதற்கு முன்பு மே 3 ஆம் தேதி முதல் 17 இடதுசாரிக் கட்சிகள் பிரம்மாண்டமான தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளன. மேற்குவங்கத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டு; ஒவ்வொரு குடிமக்களின் தேர்தல் உரிமையை நிலைநாட்டு என்ற முழக்கத்துடன் லட்சக்கணக்கான மக்கள் அணிதிரள்கிறார்கள். மே 3 அன்று துவங்கி நடைபெறவுள்ள இந்தப் போராட்டம் மக்கள் சக்தி என்றால் என்னவென்று மம்தாவுக்கு பாடம் புகட்டும் என முழங்குகிறார் சூர்யகாந்தமிஸ்ரா.

வெல்லட்டும் இந்தப் போராட்டம்.

Leave a Reply

You must be logged in to post a comment.