திருவனந்தபுரம்:
காவல் நிலையத்தில் இருந்து உயிரிழந்த வராப்புழ ஸ்ரீஜித்தின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இறந்தவரின் மனைவிக்கு அரசுப்பணி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த மாதம் வராப்புழயில் வாசுதேவன் என்பவரை அவரது வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல் தாக்கியது. அதையொட்டி வாசுதேவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதில் வராப்புழ ஸ்ரீஜித் உள்ளிட்ட பத்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையின் பிடியிலிருந்த ஸ்ரீஜித் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல்துறையினரின் தாக்குதலில் ஸ்ரீஜித் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக 3 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் ஸ்ரீஜித்தின் வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தற்கொலை செய்துகொண்ட வாசுதேவனின் வீட்டுக்கும் சென்று அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். புதனன்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்ரீஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், அவரது மனைவிக்கு தகுதிக்கேற்ற அரசுப்பணி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசின் நடவடிக்கை குறித்து திருப்தி தெரிவித்த ஸ்ரீஜித்தின் மனைவி தனது கணவரின் இறப்புக்கு காரணமான காவல்துறையினருக்கு தண்டனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: