ஈரோடு,
வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை வலுப்படுத்தக்கோரி ஈரோட்டில் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களைப் பாதுகாக்கும் வகையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கடுமையாக்க வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியல் சட்டம் 9 ஆவது அட்டவணையில் இணைத்திட வேண்டும். தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் பி.பி.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மா.அண்ணாதுரை, வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை வலுப்படுத்துவதற்கான தேசிய கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.கருப்புசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல நிர்வாகி நா.விநாயகமூர்த்தி, மக்கள் கண்காணிப்பக செயல் தலைவர் ஹென்றி டிபேன், தமிழ்புலிகள் அமைப்பின் சிந்தனை செல்வன், ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி வீரகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, விடுதலை வேங்கை, அருந்ததியர் இளைஞர் பேரவை, ஜெகஜீவன்ராம் ஜனநாயக மக்கள் இயக்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.