இன்றிலிருந்து கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்காக வாய்ச் சொல்லில் வீரரான மோடி, தொடர்ந்து 5 நாட்கள், 15 கூட்டங்களில் பேச இருக்கிறாராம். ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட இதையேச் சொல்லி கத்திக் கொண்டு இருக்கின்றன.

மோடியின் மேஜிக் செல்லுபடியாகுமா? என்று சுவராசியம் கிளப்புகிறார்கள். வரும் 2019 தேர்தலுக்கான செமி ஃபைனல் இது என்று பரபரப்பை கூட்டுகிறார்கள். மோடி டெல்லியை விட்டுக் கிளைம்பி விட்டார், பெங்களூர் அடைந்து விட்டார், இதோ விமானத்திலிருந்து இறங்குகிறார் என மோடியின் அசைவுகளை எல்லாம் மாற்றி மாற்றி காண்பிக்கிறார்கள். ஊடகங்கள் பச்சையாக காவி மயமாகி விட்டது. தனிநபர் வழிபாட்டை மக்களுக்குள் செலுத்துவதே அவைகளின் ஊடக தர்மமாய் இருக்கிறது.

சரி, இப்படியாக 56 இஞ்ச் வேங்கை களத்தில் இறங்குகிறது.

மோடி என்ன பேசப் போகிறார், மக்களை தன் பேச்சால் எப்படி ஈர்க்கப் போகிறார், தேர்தல் முடிவுகளில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தப் போகிறர் என ஆள் ஆளுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளில் மண்டை உடைத்துக்கொண்டு இருக்கிறார்கள். கர்நாடகா முதல்வர் சீதாராமையா பெங்களூரில் மோடி கால் வைப்பதற்கு முன்பே அவருக்கான அஜெண்டாவைத் தீர்மானித்து விட்டார். “எங்கள் கர்நாடகா உங்களை வரவேற்கிறது. தேர்தல் பிரச்சாரம் செய்ய தாங்கள் வருவதாக அறிகிறேன் எனச் சொல்லி சில கேள்விகளை அவரிடம் கேட்டு இருக்கிறார். அதற்கு மோடி தனது பிரச்சாரத்தில் பதில் சொல்வாரென எதிர்பார்ப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.

1. எல்லோருக்கும் 15 லட்சம் தருவதாக சொல்லி இருந்தீர்கள். பிறகு தேர்தலுக்காக சும்மா சொன்னது என்றீர்கள். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி கொடுத்தீர்கள். பிறகு பக்கோடா விற்கச் சொன்னீர்கள். கருப்புப் பணத்தை பிடிக்கப் போகிறோம் என்று நீங்கள் சாமானிய மக்கள் அனைவரையும் துன்புறுத்தினீர்கள். எதையும் பிடிக்கவில்லை. இப்போது இங்கு வந்து ‘வளர்ச்சி’ என்னும் லாலிபாப் கொடுக்கப் போகிறீர்களா?

2. கார்ப்பரேட்களுக்கு 2 லட்சத்து 71 ஆயிரம் கோடி தள்ளுபடி வழங்கி இருக்கிறீர்கள். விவசாயிகளுக்கு உங்கள் வெறும் பேச்சை மட்டுமே வழங்கிக் கொண்டு இருக்கிறீர்கள். விவசாயிகளின் பிரச்சினையை முக்கியமாகக் கருதி என்ன செய்து இருக்கிறீர்கள்?

3. ஊழல் கறை படிந்த எடியூரப்பாவோடு கர்நாடகாவில் பொதுக் கூட்டங்களில் நீங்கள் சேர்ந்து கலந்து கொள்ள விரும்பாததாக ஊடகங்களில் முன்பு சொல்லப்பட்டன. இப்போது அந்த எடியூரப்பாதான் கர்நாடகா பிஜேபியின் முகமாக இருக்கிறார். பொதுக் கூட்டங்களில் அவர்தான் பிஜேபியின் முதல்வர் வேட்பளர் என அறிவிக்கப் போகிறீர்களா?

4. ஜனார்த்தன ரெட்டி குடும்பத்தாருக்கு தேர்தலில் 8 சீட்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்களையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊழலுக்கு எதிராக என்ன பேசப் போகிறீர்கள்?

5. கர்நாடகாவில் பாலியல் வல்லுறவு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, சட்டசபையில் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு தேர்தலில் சீட்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 16 வயது பெண்ணை வல்லுறவு செய்த உங்கள் கட்சி எம்.எல்.ஏவை காப்பாற்ற உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முயற்சிக்கிறார். ஜம்மு கஷ்மீரில் 8 வயது பெண்குழந்தையை வல்லுறவு செய்து கொன்றவர்களை உங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள். இதுதான் நிலைமைகளய் இருக்க கர்நாடாகவில் ‘பெண்களை வல்லுறவு செய்வதை’ அரசியலாக்க வேண்டாம் என உங்கள் கட்சிக்காரார்கள் ஆர்ப்பாட்டமாக விளம்பரம் செய்து கொண்டு இருப்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்?

இவைகளுக்கெல்லாம் மோடியின் வாய் ஒன்றும் திறக்கப் போவதில்லை. அவரது மனசாட்சி படுத்த படுக்கையாகி விடும்.

ஆனால் இந்தக் கேள்விகள் அனைத்தும் #GoBackModi என விடாமல் மோடியை விரட்டப் போகின்றன.

#ModivsIndia

Mathavaraj

Leave a Reply

You must be logged in to post a comment.