கோவை,
பணிச்சுமையை அதிகரித்து சுகாதார மக்கள் நலத்திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதார செவிலியர்கள் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீட்டு இயக்கத்தை மேற்கொண்டனர்.

பிரதம மந்திரியின் நாடு தழுவிய சுகாதார பாதுகாப்பு கணக்கெடுப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்பணியை தமிழகத்தில் சுகாதார செவிலியர்கள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையில் அறிவிக்கப்படும் அனைத்து பணிகளையும் கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி மற்றும் சமுதாய சுகாதார செவிலியர்கள் முழுமையாக தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது செவிலியர்களிடம் திணித்துள்ள இப்பணியினால் சுகாதார திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே சுகாதார செவிலியர்கள் பணியிடங்கள் நூற்றுக்கணக்கில் காலியாக உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மற்றும் பொதுசுகாதாரத்துறை மத்திய அரசின் திட்டத்தை செவிலியர்களின் மீது திணிப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீட்டு இயக்கத்தை மேற்கொண்டனர்.இந்த இயக்கத்திற்கு தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தெய்வாத்தாள் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பிரேமலதா, மாவட்டச் செயலாளர் சுமதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் பாஸ்கரன், இன்னாசிமுத்து ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினர். இதனைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. முடிவில் தேவகி நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.