நாகர்கோவில்:
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்போம் என்ற வாக்குறுதியைக் கூட மத்திய அரசிடமிருந்து  பெறமுடியாத ஒரு திறனற்ற அரசு என என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சாடினார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு கே.பாலகிருஷ்ணன் செவ்வாயன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மத்திய அரசு தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று பல கட்ட போராட்டங்களை நாம் நடத்தியுள்ளோம். ஆனால் மீண்டும் மீண்டும் மத்திய அரசு நம்முடைய குறைகளையோ, கோரிக்கைகளையோ பரிசீலிக்கத் தயாரில்லை. கடைசியாக உச்சநீதிமன்றம் ஆறு வாரகாலம் அவகாசம் கொடுத்தும் அமைக்கவில்லை. பிறகு, 3 ஆம் தேதி ஒரு வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய சொல்லியிருந்தார்கள். இதற்கிடையில் மேலும் 15 நாள் அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு போட்டு பிறகு அரசு வழக்கறிஞரே இது நியாயமில்லை எனக்கூறி அந்த வழக்கை வாபஸ் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இப்படியான மனோநிலையை கொண்டிருக்கிற மத்திய மோடி அரசு வரும் 3 ஆம் தேதி கூட ஒரு ஆக்கபூர்வமான வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்படவில்லை. நிச்சயமாக ஒரு கண்துடைப்புக்காக வரைவு  திட்டத்தை சமர்ப்பித்துவிட்டு பிறகு மேலும், அவகாசம் கொடுங்கள் என்ற முறையில் தான் செய்வார்கள் என்ற கருத்தே இருக்கிறது. குறிப்பாக மே மாதம் 12 ஆம் தேதி கர்நாடக தேர்தல் வருகிற வரை அவர்கள் இதில் எதையும் உருப்படியாக செய்யமாட்டார்கள் என்று கருத வேண்டிய நிலைமை உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் சம்பந்தமாக 3 ஆம் தேதி நீதிமன்ற முடிவுக்குப் பிறகு மீண்டும் அனைத்து கட்சிகள் கூடி வலுவான போராட்டத்தை முன்னெடுப்போம்.

புதன்கிழமை தமிழக முதல்வர் தில்லிக்கு பிரதமரை பார்க்க செல்வதாக கூறுகிறார்கள். இவர்கள்  போய் போய் பார்த்துவிட்டு வருகிறார்களே தவிர, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்போம் என்ற வாக்குறுதியைக் கூட மத்திய அரசிடமிருந்து  இவர்களால் பெறமுடியவில்லை. அந்த அளவுக்கு ஒரு திறனற்ற அரசாகத்தான் அதிமுக அரசு இருக்கிறது.
அதே சமயம் காவிரி டெல்டா பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவத்தை குவித்து வைத்துள்ளனர். இதுகுறித்து முதல்வரிடம் கேட்டால்,  பயிற்சிக்காக வந்துள்ளார்கள் எனக்கூறுகிறார்.

தமிழ்நாட்டின் உயிர்நாடியாக உள்ள காவிரி டெல்டா  பகுதியை இன்று ஒரு  ரசாயன மண்டலமாக மாற்றுவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதை எதிர்த்து அங்குள்ள மக்கள் போராடக்கூடாது என்பதற்காகதான் இப்போது  துணை ராணுவப் படையை அங்கு தங்க வைத்து அணிவகுப்பு நடத்துகிறார்கள்.  எனவே உடனடியாக துணை ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும். துணை ராணுவத்திற்கு, மக்கள் வாழும் பகுதியில் என்ன பயிற்சி அளிக்கப் போகிறீர்கள்? ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்கள் என்று கடுமையாக போராடி கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த ஆலையை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுத்த அனுமதி காலாவதியாகி விட்டது. அதற்காக புது அனுமதி வாங்க வேண்டிய நிலையில் நிர்வாகத்தினர் எப்படியேனும் புது அனுமதி வாங்கி விடுவோம் என கூறுகின்றனர். இதை அனுமதிக்க முடியாது.

அணு உலைப் பூங்கா
திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளத்தில் ஏற்கனவே 2 அணு உலைகள் அமைத்தார்கள். இப்போது 3,4,5,6 என அணு உலை பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளார்கள். எந்த ஒரு இடத்திலும் இவ்வாறு அணு உலை பூங்கா அமைக்கக்கூடாது. மக்கள் எது வேண்டும் என்று கேட்கிறார்களோ அதை மத்திய மோடி அரசு கொடுப்பதில்லை. எதையெல்லாம் மக்கள் வேண்டாம்  என்று சொல்கிறார்களோ அதை கட்டாயப்படுத்தி திணிக்கிறது.

மாநில அரசு மீது  அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது. குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறதென்றால் உரிய முகாந்திரம் இல்லாமல் இருக்குமா? தற்போது 1500 கோடி ரூபாய்க்கு கோயம்புத்தூரில் குட்கா தொழிற்சாலையே இயங்கியிருப்பது தெரியவந்து கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் உற்பத்தி செய்யும் குட்கா பொருட்கள் இந்தியா முழுமைக்கும், வெளிநாடுகளுக்கும்  கடத்தப்படும் நிலைமை இருக்கிறதோ என்ற சந்தேகம் உள்ளது.

கூட்டுறவு சங்கத் தேர்தல்
கூட்டுறவு சங்க 4 ஆம் கட்ட தேர்தல் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. கொஞ்சம் கூட ஜனநாயகப்பூர்வமாக அந்த தேர்தல் நடக்கவில்லை. எனவே, உயர்நீதிமன்றம் தடை விதித்தது. உச்சநீதிமன்றத்தில் சென்று மனுபோட்டு தேர்தலை நடத்த அனுமதி வாங்கியுள்ளார்கள். ஆனால், எந்த இடத்திலும், யாரையும் வேட்புமனு தாக்கல் செய்ய விடவில்லை. வேட்பு மனு தாக்கலுக்கு ஆட்கள் வந்தால் உள்ளே விடுவதில்லை. அதிகாரிகள் வருவதில்லை. இறுதியில் குறைந்த வேட்புமனுக்கள் தான் வந்துள்ளது; எனவே, மற்றவர்களின் மனுக்களை நிராகரிக்கிறோம் என கூறுகின்றனர்.  ஏற்கெனவே கூட்டுறவுதுறை நொடிந்து தடுமாறிக் கொண்டுள்ளது.கூட்டுறவு முழுவதையும் கொள்ளையடித்து முடித்து விட்டார்கள். மிச்சமிருக்கிற கூட்டுறவுத் துறையையும் கொள்ளையடித்து அழிக்கும் ஏற்பாடாகத்தான் தேர்தல் முறைகேடுகளை அதிமுக அரசு செய்து வருகிறது.

குடிநீர் பிரச்சனை
தமிழகத்தின் சரிபாதி பகுதிகளில் 10 நாட்கள், 12 நாட்களுக்கு ஒருமுறை தான் குழாய்களில்  தண்ணீர் வழங்குகிறார்கள். 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் கிடைக்கும் ஊர்கள் மிகவும் அரிதாகி விட்டது. பெரும்பான்மையான மக்கள் ஒரு குடம் தண்ணீரை 20 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலைதான் தமிழகத்தில் உள்ளது.

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் கடுமையாக தாக்கியது. ஒக்கி புயலில் இறந்த மீனவர்களுக்கு கொஞ்சம் நிவாரணம் பணம் கொடுத்தார்கள். அதிலும் உடல் கிடைக்காதவர்களுக்கு அடுத்த 3 மாதத்தில் பணம் கொடுக்கிறோம் என்றார்கள். ஆனால் இப்போது வரை பணம் கொடுக்க ஏற்பாடு இல்லை. மத்திய அரசுடன் அதிமுக ஆட்சியாளர்கள் இணக்கமாக இருந்து மத்திய அரசிடம் எவ்வளவு பணம் ஒக்கி புயல் நிவாரணமாக கூடுதலாக வாங்கி விட்டார்கள்?
எஸ்.வி.சேகர் பத்திரிக்கையாளர்களை, பெண்களை மிகவும் கேவலமாக சித்தரித்து முகநூலில் பதிவிடுகிறார். அவருக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுக்கிறது. ஆனால் அவரை கைது செய்ய தமிழக அரசு தயங்குகிறது. அதற்கு ஒரே காரணம் என்னவென்றால் அவருக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கும், உயர் அதிகார பீடத்தில் அவருக்கு வேண்டியவர்கள் இருப்பதும்தான்.

நாளை மாநிலக்குழு கூடுகிறது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் மதுரையில் மே 2, 3 தேதிகளில் நடக்க இருக்கிறது. அந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள இன்றைய அரசியல் சூழல் குறித்தும், அடுத்து செய்யவேண்டிய பணிகள் குறித்தும் விவாதித்து முடிவெடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: