திருப்பூர்,
திருப்பூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற எட்டு பேரை மாநகர காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர், நெருப்பெரிச்சல் அருகே தியாகி பழனிசாமி நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சாந்தாமணி, மகன் ஸ்ரீராம், மகள் பவதாரணி. பனியன் நிறுவனம் நடத்தி வரும் சிவக்குமார் கடந்த 24ஆம் தேதி நிறுவனத்துக்குச் சென்றுவிட்டார். அப்போது பகல் 11.30 மணியளவில் சாந்தாமணியும், குழந்தைகளும் மட்டும் வீட்டில் இருந்தபோது ஒரு காரில் வந்த ஆறு நபர்கள் வீட்டின் முன்பாக காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தனர். தாங்கள் வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறி ஓட்டுநர் தவிர ஐந்து பேர் வீட்டைச் சோதனை செய்வதாகக் கூறியுள்ளனர். வீட்டில் இருந்த 18 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.4 லட்சத்தை எடுத்துக் கொண்டு சென்றனர். மேலும் சிவக்குமாரை கோவை வருமான வரித்துறை அலுவலகத்தில் வந்து உரிய கணக்குக்காட்டி சொத்துகளை பெற்றுச் செல்லும்படி கூறிச்சென்றுள்ளனர். வீட்டில்இருந்த கண்காணிப்பு கேமிரா சம்பந்தப்பட்ட கருவிகளையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சாந்தாமணி தனது கணவர் சிவக்குமாரிடம் கூறியுள்ளார். வந்தவர்கள் வருமானவரித் துறையினரைப் போல் நடித்து ஏமாற்றி சொத்துகளை கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் கே.டி.ராஜன்பாபு தலைமையில் உதவி ஆய்வாளர் ஆறுமுகம், தலைமை காவலர்கள்காளிமுத்து, ஜெயக்குமார், காவலர்கள் ஸ்டாலின், முகரம், அம்சத்குமார், ஆயுதப்படை தலைமை காவலர் குருநாதன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றிய ஜெயராம் (42), கார்த்தி (38), துரை சத்குரு (39), கார்த்தி @ போலீஸ் கார்த்தி (37), வேணுகோபால் (48), ரகு (29), ஆறுமுகம் (38) மற்றும் முத்துகுமார் (25) ஆகிய எட்டுப் பேரை செவ்வாயன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 சவரன் தங்க நகைகள் பணம் ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் மற்றும் கண்காணிப்பு கேமிரா கருவி ஆகியவற்றையும், இந்த சம்பவத்திற்கு பயன்படுத்திய காரையும் கைப்பற்றினர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிவக்குமார் சூதாட்ட கிளப்புகளில் சென்று சூதாடும் பழக்கம் உடையவர். இவர் செல்லும் சூதாட்ட கிளப்புகளுக்கு குற்றவாளி ஜெயராம் என்பவரும் வந்து சூதாடி செல்வார். சிவக்குமார் சூதாட்டத்தின் போது அதிக அளவில் பணம் வைத்தும் விளையாடுவதும், அதன் மூலமாக அதிக பணம் சம்பாதிப்பதை ஜெயராம் அறிந்துள்ளார். எனவே இவரிடம் அதிக அளவில் பணம் இருக்கும் என தெரிந்துகொண்டு அதனை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் ஜெயராமும், அவருடன் சேர்ந்து சூதாட்ட கிளப்புகளில் சூதாடும் நண்பர்களான கார்த்திக், சத்குரு, வேணுகோபால், ஆகியோர் சேர்ந்து திட்டமிட்டு போலீஸ் கார்த்தி, ரகு, முத்துக்குமார், ஆறுமுகம் ஆகியோர் ஒன்று சேர்ந்துகூட்டு சதி செய்து சிவக்குமார் வீட்டினை நோட்டமிட்டு அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் கொள்ளை சம்பவத்தை செய்துள்ளனர் என தெரியவந்தது.கைது செய்யப்பட்டோர் நீதிமன்றக்காவலுக்கு உட்படுத்தி சிறை வைக்கப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.